×

களை கட்டிய பொங்கல் பண்டிகை களக்காட்டில் மஞ்சள் குலைகள் பனங்கிழங்குகள் அறுவடை தீவிரம்

களக்காடு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று தித்திக்கும் கரும்பு, மங்களம் பொங்கும் மஞ்சள்குலைகள் காய்கறிகள் படைத்து, புத்தம் புது பானையில், புத்தரிசியிட்டு, பொங்கலிட்டு வழிபடுவது மரபு ஆகும். பொங்கலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் களக்காடு பகுதியில் மஞ்சள்குலை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. களக்காடு கருப்பந்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன் விவசாயிகள் மஞ்சள்குலைகள் பயிர் செய்திருந்தனர். தற்போது மஞ்சள் குலைகள் நல்ல விளைச்சலுக்கு வந்துள்ளன. இதற்கிடையே பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் மஞ்சள்குலைகள் அறுவடை செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் மஞ்சள்குலைகள் களக்காடு மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு மஞ்சள் குலை தரம் வாரியாக ரூ.20ல் இருந்து ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரும் நாட்களில் மஞ்சள் குலை வரத்து அதிகரித்தால் விலை குறையும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இருப்பினும் விளைச்சலுக்கு ஏற்ப நல்ல விலையும் கிடைப்பதால் மஞ்சள்குலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல பொங்கலை முன்னிட்டு களக்காடு, சாலைப்புதூர், எஸ்.என்.பள்ளிவாசல், மாவடி, திருக்குறுங்குடி, சிதம்பரபுரம், மூங்கிலடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனங்கிழங்குகள் பிடுங்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பனங்கிழங்கு வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுபோல கரும்புகள் விற்பனையும் களை கட்டியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pongal festival,
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்