×

ரோகித் ஷர்மா அதிரடி சதம் வீண் - முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

சிட்னி: இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 34 ரன் வித்தியாசத்தில் வென்றது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. இந்திய அணியில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இடம் பெறவில்லை. ஆஸி. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் கேரி, கேப்டன் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர்.பிஞ்ச் 6 ரன் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்த கேரி 24 ரன் எடுத்து (31 பந்து, 5 பவுண்டரி) குல்தீப் சுழலில் ரோகித் வசம் பிடிபட்டார். உஸ்மான் கவாஜா - ஷான் மார்ஷ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 92 ரன் சேர்த்தது. கவாஜா 59 ரன் (81 பந்து, 6 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்ப, ஷான் மார்ஷ் - ஹேண்ட்ஸ்கோம்ப் இணை 4வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது.

அரை சதம் அடித்த ஷான், 54 ரன் எடுத்து (70 பந்து, 4 பவுண்டரி) குல்தீப் சுழலில் ஷமி வசம் பிடிபட்டார். அடுத்து ஹேண்ட்ஸ்கோம்ப் உடன் இணைந்த ஸ்டாய்னிஸ் சிறப்பான கம்பெனி கொடுக்க, ஆஸி. ஸ்கோர் எகிறியது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தனர். ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன் (61 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி புவனேஷ்வர் பந்துவீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 47 ரன் (43 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் குல்தீப், புவனேஷ்வர் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். பெஹரன்டார்ப் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே, ஜை ரிச்சர்ட்சன் வீசிய 4வது ஓவரில் விராத் கோஹ்லி (3 ரன்), அம்பாதி ராயுடு (0) பெவிலியன் திரும்ப, இந்தியா 3.5 ஓவரில் 4 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இக்கட்டான நிலையில் ரோகித் ஷர்மா - டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ஒரு முனையில் ரோகித் அதிரடியாக விளையாட, டோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து 137 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். டோனி 51 ரன் (96 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெஹரன்டார்ப் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார்.

அபாரமாக விளையாடிய ரோகித், ஒருநாள் போட்டிகளில் தனது 22வது சதத்தை நிறைவு செய்தார். தினேஷ் கார்த்திக் 12, ஜடேஜா 8 ரன் எடுத்து ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடுமையாகப் போராடிய ரோகித் 133 ரன் (129 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார். அவர் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. கடைசி கட்டத்தில் ஓவருக்கு 20 ரன்னுக்கும் அதிகமாக தேவைப்பட்ட நிலையில்... குல்தீப் யாதவ் (3), முகமது ஷமி (1) ஆட்டமிழந்தனர்.

இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன் மட்டுமே எடுத்து 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. புவனேஷ்வர் குமார் 29 ரன்னுடன் (23 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஜை ரிச்சர்ட்சன் 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 26 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். பெஹரன்டார்ப், ஸ்டாய்னிஸ் தலா 2, சிடில் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் 15ம் தேதி நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rohit Sharma ,Australia , Indian team, Australia's victory, the first one-day match
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...