×

திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து புறப்பட்டது - சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை

திருவனந்தபுரம்,: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்திப் ெபற்ற மகரவிளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. இதற்காக, பந்தளத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. பிரசித்திப் பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் கடந்த 11ம் தேதி நடந்தது. மகரவிளக்கு பூஜை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணங்களை அணிவிப்பதற்காக, பந்தளம் வலிய ேகாயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து நேற்று மதியம் திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.

இது, நாளை மாலை சன்னிதானத்தை அடையும். மாலை 6.35 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரியும்.

ஏராளமான பக்தர்கள் மகர ஜோதி தரிசிக்க வருவார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை மதிய பூஜைக்கு பின்னர் பக்தர்கள் 18ம் படியேற தடை விதிக்கப்படும். பின்னர் ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.

மகர ஜோதியை தரிசிக்க சன்னிதானம், பாண்டித்தாவளம், பம்பை மற்றும் மகர ஜோதி தென்படும் பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 20ம் தேதி காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். 19ம் தேதி இரவுவரை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் 18ம் தேதியுடன் நெய்யபிஷேகம் நிறுத்தப்படும். 20ம் தேதியுடன் இவ்வருட மகரவிளக்கு காலம் நிறைவடையும்.


ஊர்வலத்திற்கு கட்டுப்பாடு தளர்வு:

திருவாபரண ஊர்வலத்தின்போது சமூக விரோத கும்பல் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து பந்தளம் அரண்மனை சார்பில் பாதுகாப்பு கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த உயர் நீதிமன்றம் திருவாபரண ஊர்வலத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் ஊர்வலம் செல்லும் பாதையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.திருவாபரண ஊர்வலத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் கலந்து கொள்ள கூடாது என்று பந்தனம்திட்டா எஸ்பி நாராயணன் உத்தரவிட்டிருந்தார். இதனால் பந்தளம் அரண்மனை நிர்வாகிகளும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு பந்தளம் அரண்மனை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த உத்தரவை வாபஸ் பெற சபரிமலை கர்மசமிதி கேரள டிஜிபியிடம் மனு அளித்தது. இதையடுத்து கொலை, கொலை முயற்சி உள்பட மோசமான குற்ற வழக்குகள் உள்ளவர்கள் மட்டுமே ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடாது. அமைதியாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்கலாம் என டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக எஸ்பி நாராயணன் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvambaranam Pandalam - Pooja Makar ,Sabarimala , Sabarimala Ayyappan Temple, Thiruvabarana Procession, Pooja for Makaravilakku
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்