×

புகை மூட்டம் ஏற்படும்படி போகிக்கு பொதுமக்கள் அதிக தீ மூட்ட வேண்டாம் - விமான நிலைய இயக்குனர் வேண்டுகோள்

சென்னை: மாசு மற்றும் புகை மூட்டம் ஏற்படும்படி, பொதுமக்கள் போகி பண்டிகைக்கு அதிக தீ மூட்ட வேண்டாம் என சென்னை விமான நிலைய இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி, விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர், கூறியிருப்பதாவது:
சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், போகி பண்டிகையான நாளை (14ம் தேதி) பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்களை தெருவில் வைத்து எரிக்க வேண்டாம். இதனால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள், விமான சேவைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேலும், அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணிவரை பல பகுதிகளுக்கு 73 விமானங்கள் செல்கின்றன. அந்த நேரத்தில் பல நாடுகள் உள்பட பல இடங்களில் இருந்து 45 விமானங்கள் சென்னை வருகின்றன. இதுபோன்று தீ வைத்து எரிக்கும் நேரத்தில் கடும் புகை மூட்டம் ஏற்படும். கடந்த ஆண்டு போகி பண்டிகையின்போது, சென்னையில் தரையிறங்க முடியாமல் பல விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பினோம். அதுபோல் சென்னையில் இருந்து புறப்படும் பல விமானங்கள் தாமதமாக சென்றன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போகியன்று அதிகாலையில் கடந்த ஆண்டை போல பழைய பொருட்களை எரித்தால், விமான சேவையில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதே நேரத்தில், நாளை காலை விமானம் மூலம் பயணம் செய்ய உள்ள பயணிகள், விமான நிலைய புறப்பாடு, வருகை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு தங்களது பயண நேரத்தை திட்டமிட வேண்டும். அதற்காக ‘சென்னை ஏர்போர்ட்’ என்ற செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், சர்வதேச விமான பயணிகள் 044-22563600, உள்நாட்டு பயணிகள் 044-22563100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இதுதவிர, பயணிகளின் சேவைக்காக கூடுதலாக 22563229, 22560542 ஆகிய எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : public , Boogie festival, pollution and smoke hitch, airport director request
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...