×

பானிபூரி கம்பெனியில் கொத்தடிமைகளாக இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த 11 சிறுவர்கள் மீட்பு

சென்னை,: உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து அழைத்து வந்து கொத்தடிமைகளாக வைத்து பானிபூரி தயாரிக்கும் கம்பெனியில் இருந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக பானிபூரி நிறுவனம் நடத்தும் 3 பேரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர். சென்னை சூளை பாட்டியா சாலையை சேர்ந்தவர் உத்தேசா (58). அவரது தம்பி முன்னா லால் (55), இவரது மகன் ராகுல் லால் (35). கடந்த 20 ஆண்டுகளாக கொண்டித்தோப்பு பகுதியில் பானிபூரி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.பானிபூரி தயாரிக்கவும், அதனை பல இடங்களில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக உத்தரபிரதேச மாநிலம், சோன்பூர் மாவட்டத்தில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 16 பேரை அழைத்து வந்துள்ளனர்.இதற்கு முன் பணமாக, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ₹2000 கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேலைக்கு அழைத்து வந்தவர்களுக்கு சரிவர உணவு, சம்பளம் கொடுக்காமல் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டனர் என தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக பானிபூரி கம்பெனியில் கொத்தடிமைகளாக வேலை செய்த சுரேஷ் (40), சுராஜ் (47) ஆகியோர் கடந்த மாதம் யாருக்கும் தெரியாமல் தப்பிவிட்டனர். அவர்களை, உத்தேசா பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி, அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர். கொத்தடிமைகளாக இருந்த சுரேஷ், சுராஜ் ஆகியோர் உத்தரபிரதேசம் சென்றனர். அங்குள்ள சமூக நல அமைப்பினரிடம், கொத்தடிமைகளாக இருந்ததையும், மேலும் பலர் அங்கு இருப்பதையும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் இருந்து சமூக நல அமைப்பினர், சென்னை வந்தனர். தண்டையார்பேட்டை ஆர்டிஓ ராஜேந்திரனிடம், பானிபூரி கம்பெனி உத்தரபிரதேசத்தில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக தெரிவித்தனர்.அதன்பேரில் ஆர்டிஓ ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், நேற்று மேற்கண்ட பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொத்தடிமைகளாக பலர் வேலை செய்வது தெரிந்தது. அங்கிருந்து 11 சிறுவர்களை மீட்டனர்.மேலும் அதிகாரிகள், உத்தேசா, முன்னா லால், ராகுல் லால் ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது குறித்து சிறுவர்கள் கூறியதாவது, எங்களுக்கு சாப்பாடு போடாமலும் தூங்க விடாமலும் மிரட்டி வேலை வாங்கினர். மேலும் விற்பனை செய்யாவிட்டால் சூடு போட்டும் அடித்தும் உதைத்தனர். கைதிகளை போல எங்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்து, ஒரு நாளைக்கு 20 மணிநேரம் வேலை வாங்கினர்’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : boys ,Uttar Pradesh ,company , Panipuri Company, Condiments, Recovery
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...