×

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் ஜரூர் அலங்காநல்லூரில் காளைகளை அடக்க தயார் நிலையில் 848 காளையர்: பாலமேட்டில் இன்று வீரர்கள் பதிவு

அவனியாபுரம்:  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜன.15, பாலமேட்டில் ஜன.16, அலங்காநல்லூரில் ஜன.17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கென அந்தந்த கிராமங்களில் உள்ள விழா கமிட்டியினர் சார்பில் ஜல்லிக்கட்டு  தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே நேற்று அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர்,  சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். இதில் 848 பேர் பங்கேற்க  அனுமதி வழங்கப்பட்டது.

காவல்துறை மூலம் வழங்கப்பட்ட  அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உடல்தகுதி சோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர். முதலில் 170 செமீ உயரம், 55 முதல் 60 கிலோ வரை எடை, 21 வயது நிரம்பியவர்களுக்கு  மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, கண் பரிசோதனை உள்ளிட்ட உடல்தகுதி சோதனைகளை வட்டார மருத்துவர் குழுவினர் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் மாடுபிடி  வீரர்களுக்கு முன் அனுமதி அட்டைகளை வழங்கினர்.
இதேபோல் மதுரை அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நேற்று  நடந்தது.   650 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் 600 வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க  அனுமதிக்கப்பட்டனர். மாடுகளுக்கான தகுதிச்சான்று விநியோகம் நேற்றுடன்  நிறைவடைந்தது.

இதேபோல், ஜன.16ம் தேதி நடக்க இருக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டிற்கான மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு இன்று நடக்கிறது. நீதிபதி குழு ஆய்வு:  மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அவனியாபுரம்  ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையில் வக்கீல்கள் சரவணன், திலீப்குமார், ஆனந்த் சந்திரசேகர் மற்றும் அவனியாபுரத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட குழு கண்காணித்து நடத்தும் என ஐகோர்ட் கிளை  உத்தரவிட்டிருந்தது. இக்குழுவினர் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை பார்வையிட்டனர். மேற்கொள்ள வேண்டிய பணிகள், பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jurassic Alanganallur 848 Kaloor , Jallikatt,Jarur,registered,Alanganallur buddies
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...