×

ராமேஸ்வரத்தில் கவர்னருக்கு சிறப்பு ஆயுஷ் ஹோமம்: 30 தீர்த்த குளங்கள் அர்ப்பணிப்பு

ராமேஸ்வரம்:  ராமேஸ்வரத்தில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு சிறப்பு ஆயுஷ் ஹோமம் நடத்தப்பட்டது. அங்கு அவர் ₹1.50 கோடியில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தக்குளங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். ராமேஸ்வரத்தில் ₹1.50 கோடி செலவில் 30 தீர்த்த குளங்கள் புதுப்பிக்கப்பட்டன. நேற்று சுவாமி விவேகானந்தரின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு இவற்றை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது.  காலை 8 மணிக்கு  தங்கச்சிமடம் மங்கள தீர்த்த வளாகத்தில் தீர்த்தம் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு கலசபூஜை நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித் கல்வெட்டினை திறந்து வைத்து, புதுப்பிக்கப்பட்ட 30  தீர்த்தக்குளங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த விழாவுக்கு அமைச்சர் மணிகண்டன் வருகைக்காக கவர்னர் மேடையில் 5 நிமிடம் காத்திருந்தார்.

தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால், சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தார். தொடர்ந்து கடற்கரையிலுள்ள சங்கர மடத்திற்கு சென்றவர் அங்கு தனக்காக நடத்தப்பட்ட ஆயுஷ்  ஹோமத்தில் பங்கேற்றார். மாலை 4.30 மணிக்கு கார் மூலம் மண்டபம் புறப்பட்டு சென்ற கவர்னர் அங்கிருந்து ரயில் மூலம் சென்னை சென்றார்.படகுகளை மீட்க மீனவர்கள் மனு: ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதிகள் கவர்னரை சந்தித்து, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுத்தரவும், பாரம்பரிய கடல்  பகுதியில் மீன் பிடிக்கவும்,  சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayush Homam ,Governor ,Rameswaram , Special Ayush ,Governor , Rameswaram, 30 Thirsty Ponds commitment
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...