×

அறிவிப்போடு நிற்கிறது 2,378 கோடி திட்டங்கள்

கோவை: கோவைக்கு ₹2,378 கோடியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வெறும் அறிவிப்போடு நிற்கிறது. கோவை மாநகரில் கடந்த 2014-ம் ஆண்டு மேயர் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, பிரசாரத்துக்கு வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகரின் கட்டமைப்பு  பணிகளுக்காக ₹2,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.இவற்றில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற, ‘’சூயஸ்’’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் கட்டமைப்பு ஏற்படுத்தவே, இன்னும்  நான்கு ஆண்டுகளாகி விடும். அதனால், இத்திட்டம், 2023-ம் ஆண்டுதான் சாத்தியமாகும் என்கிறார்கள் பொறியாளர்கள்.‘’ஸ்மார்ட் சிட்டி’’ திட்டத்தில் துவக்கிய, ‘’ஓபோ’’ சைக்கிள் திட்டம், அதிகாரிகளின் போதிய  ஒத்துழைப்பின்றி, தோல்வியை சந்தித்தது. வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் திட்டம், ‘’பஸ் போர்ட்’’டாக பெயர் மாற்றப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அத்துறை  அதிகாரிகள் ஆய்வு செய்து, நிதி ஒதுக்கி, கட்டுமான பணி மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர். ஆனால், 5 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இன்னமும் ஆரம்பக்கட்ட பணிகூட துவங்கவில்லை. கட்டட மறுசுழற்சி மையம்  கட்டுவதற்கு ஒப்பந்தமிட்ட நிறுவனம் இயந்திரம் தருவிக்காததால், ரத்து செய்யப்பட்டு விட்டது. புதிதாக ‘’டெண்டர்’’ கோர, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.

இதேபோல், ‘’மல்டிலெவல் பார்க்கிங்’’ திட்டமும் இழுபறியாகவே உள்ளது. இத்திட்டத்துக்கு, மீண்டும் ‘’டெண்டர்’’ கோரப்பட்டுள்ளது. சங்கனுார் பள்ளத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கி,  நீர்வழிப்பாதையை துார்வாரி, அரை வட்டப்பாதை அமைக்க, 190 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால், இத்திட்டம்  கிடப்பில் போடப்பட்டுள்ளது. உக்கடம் லாரிப்பேட்டை திட்டமும் போதிய நிதியின்றி முடங்கி கிடக்கிறது. பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு, 125 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் கையகப்படுத்தவேண்டியுள்ளது. விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாலும், பவானி ஆற்றில் தண்ணீர் எடுக்க, அப்பகுதி மக்கள் ஆட்சேபணை  தெரிவிப்பதாலும், ஆமை வேகத்தில் இப்பணி நகர்கிறது. மேற்கண்ட இத்திட்டங்களை ஜெயலலிதா அறிவித்து, 5 ஆண்டுகளாகி விட்டன. ஆனால், ஒரு திட்டம்கூட செயல்பாட்டுக்கு வந்தபாடில்லை. அதிகாரிகள் தரப்பில் போதிய  அக்கறை செலுத்தாமல் இருப்பதாலும், அரசு தரப்பில் நிதி ஒதுக்காமல் இருப்பதாலும், இவை தாமதமாகி வருகின்றன. அதேநேரம், மாநகரில் குளக்கரை பராமரிப்பு, பூங்கா அமைத்தல் என தேவையில்லாத பணிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி செலவிடுவது மாநகர மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement , The announcement, 2,378 crore ,projects
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...