×

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து, 1.65 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கும், ‘ஆம்னி’ பஸ்களை பிடிக்க, ‘டீம்-50’ அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து படிப்பு, பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

அவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே, தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், ஆம்னி நிர்வாகம் ஆகியவை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. குறிப்பாக தமிழக அரசு, அதிகளவில் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தினசரி இயக்கக்கூடிய, 2,275 பேருந்துகளை தவிர சிறப்பு பேருந்துகளாக தினசரி 5,163 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பொங்கல் பண்டிகை வரை மொத்தம், 14,263 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி நேற்று முதல் ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி சென்னையிலிருந்து 1 லட்சத்து 65 ஆயிரத்து 301 பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இதேபோல், ‘ஆம்னி’ பஸ்களிலும், ரயில்களிலும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்ட ஒரு சில ‘ஆம்னி’ பஸ் உரிமையாளர்கள், கூடுதல் கட்டணம் வசூலித்து அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலர் பழுதடைந்த பஸ்களை கொண்டு வந்து, குறைவான கட்டணத்தில் பயணிகளை அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தை கூறி வருகின்றனர்.இதைநம்பி செல்வோர் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த பஸ்கள் ஆங்காங்கு நின்று விடுவதால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துத்துறை சார்பில், ‘டீம்-50’ அமைத்து மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பஸ்களை பிடிக்க ‘டீம்-50’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த, 50 குழுக்களும் தமிழகம் முழுவதும் அனைத்து முக்கிய இடங்களிலும் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்துவார்கள். அப்போது கூடுதல் கட்டணம் வசூல் செய்தல், லைசென்ஸ் இல்லாமல் இயக்குதல் போன்ற பிரச்னைகளில் சிக்கும் ‘ஆம்னி’ பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பார்கள். இதுவரை மாநிலம் முழுவதும், 4 ‘ஆம்னி’ பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததற்காக பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுப்பணி நடந்து வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிகள் குறித்து, 18004256151 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம். உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, குற்றம் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்


250 சிறப்பு பஸ்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மாதவரம் புதிய பேருந்துநிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து தமிழகம் மட்டும் அல்லாது கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 250 இணைப்பு பேருந்துகள் இயக்க எம்.டி.சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, இந்த பேருந்துகள் நேற்று, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 4 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக சம்மந்தப்பட்ட பஸ் ஸ்டாண்டுகளுக்கு பயணிக்க முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pongal Festival Celebration ,Chennai , Pongal Festival, hometown tour, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...