×

தெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்கு பதிவு : கொடநாடு விவகாரம் விஸ்வரூபம்

சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் கொள்ளை, செக்யூரிட்டி கொலையில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் டிரைவர் உள்பட 5 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் குற்றம்சாட்டியதால், அவர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதால், குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் சசிகலாவுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அதன்பின்னர் 2017 ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு எஸ்டேட்டிற்குள் சென்ற ஒரு கும்பல், செக்யூரிட்டியை கட்டிப் போட்டு கொலை செய்து விட்டு, அங்கிருந்த ஆவணங்கள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இந்த விவகாரம் குறித்து அப்போது ஊட்டி எஸ்பியாக இருந்த முரளி ரம்பா, விசாரணை நடத்தி வந்தார். இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் சயன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ்தான் கொள்ளையடிக்கச் சொன்னதாக தெரிவித்தனர். ஆனால் கனகராஜ், பணத்தை கொள்ளையடிக்கவில்லை. முக்கிய ஆவணங்களை மட்டுமே தேடி, ஒவ்வொரு அறைக்கும் சென்றார். பீரோவையும் திறந்து பார்த்தார். ஆனால் முக்கிய ஆவணங்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார் என்று கூறியிருந்தார். இதனால் கனகராஜை போலீசார் தேடி வந்த நிலையில், கனகராஜ் மர்மமான முறையில் வாகனம் மோதி, உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனின் மனைவி, மகள் விபத்தில் உயிரிழந்தனர். சயன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் 2 பேர், மர்மமான முறையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். கொடநாடு விவகாரத்தில் மொத்தம் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஆனால் கொடநாடு கொள்ளை வழக்கில் போலீசார், சயன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 திடீர் திருப்பமாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், கூலிப்படை தலைவன் சயன், மனோஜ் ஆகிய 3 பேர் டெல்லியில் நேற்றுமுன்தினம் பேட்டியளித்தனர். மேலும் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஆவணங்களையும் பத்திரிகையாளர்கள் முன்பு போட்டுக் காட்டினர். அதில் கூலிப்படை தலைவன் சயன் கூறும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக இந்த வேலைகளை செய்கிறோம். பழனிசாமி, தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறியதால்தான் இந்த வேலைகளில் நாங்கள் இறங்கினோம். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு நடந்த விபத்தில் என் மனைவி, மகள் உயிரிழந்து விட்டனர். தற்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. இதனால் எல்லா தகவல்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக கூறுவதாக தெரிவித்திருந்தார்.

தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் கூறும்போது, ‘எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. ஜெயலலிதாவிடம் அதிமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள். அப்போது பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுவார்கள். இதை ஜெயலலிதா வீடியோ எடுத்து வைத்திருப்பார். இதை வைத்துத்தான் கட்சியினரையும், ஏன் அமைச்சர்களையும் அவர் மிரட்டி வந்தார். இந்த ஆவணங்களுக்காகத்தான் கொள்ளை நடந்துள்ளது. இந்த ஆவணங்களில், எடப்பாடியின் வீடியோ இருந்திருக்கலாம். அல்லது கட்சியினரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த சம்பவங்கள் நடந்திருக்கலாம். இந்த விவகாரம் விஸ்வரூபம் ஆனதால் அடுத்தடுத்து 5 பேர் பலியாகிவிட்டனர். இது கொலையாகத்தான் இருக்கும்’’ என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், கொடநாடு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் குறித்து தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர். வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பின்புலமாக இருப்பவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

ஆனால், இந்த எச்சரிக்கையைப் பற்றி தனக்கு கவலை இல்லை என்று தெரிவித்த, தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், ‘‘விசாரணையை சந்திக்க தயார். இந்த விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும். தன்னிடம் ஏராளமான ஆவணங்கள் உள்ளன. எடப்பாடி பழனிசாமிதான் குற்றவாளி என்று தற்போது சந்தேகப்படுகிறேன். எங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது’’ என்றார். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராசா, ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறும்போது, கொடநாடு கொள்ளை நடக்கும்போது, மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு போடப்படவில்லை. சிசிடிவி கேமரா நிறுத்தி விட்டனர் ஆகிய 3 குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இது எல்லாமே அதிகாரம் உள்ளவர்களால்தான் செய்ய முடியும். அதிகாரம் யாரிடம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது. இதனால்தான் அவர் பதவி விலக வேண்டும் என்கிறோம். ஆனால் அவர் பதவி விலக மாட்டார். அதனால், போலீஸ்துறையை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டு விசாரணையை அவர் சந்திக்க வேண்டும். அவரது துறையின் கீழ் வரும் போலீசால் எப்படி அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முடியும். விசாரணை முடியும் வரையாவது அவர் விலகியிருக்க வேண்டும். அவர் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யாவிட்டால், நீதிமன்றம் செல்வோம்’’ என்று கூறினர்.

 அதேபோல, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைத்துக் கட்சியினரும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளதால், இந்த விவகாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

எந்த பிரிவுகளில் வழக்கு?
அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் 153,153ஏ,505,1(பி),505(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கூலிப்படை தலைவன் சயன், மற்றும் மனோஜ் ஆகியோரும் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் மேத்யூசுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். கொடநாடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : editor ,Tehelka , Kodanad estate, documents robbery, murder, tekkalka, case record
× RELATED தமிழ்நாடு முழுவதும் 104 சிவில்...