×

ஈரோட்டில் இருந்து திண்டல் வரை ரூ.300 கோடி செலவில் மேம்பாலம்

* மண் ஆய்வு செய்யும் பணிகள் தீவிரம்

ஈரோடு : ஈரோடு பெருந்துறை ரோட்டில் இருந்து திண்டல் வரை 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மண் ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனை எம்.ஜி.ஆர் சிலை சிக்னல் பகுதியில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும், மேம்பால பணிகளை மேட்டூர் ரோட்டில் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில், மேம்பால பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் பெருந்துறை ரோட்டில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் வித்யாநகர் மேடு வரை 5.5 கி.மீ. தூரத்திற்கு 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. மேம்பால கட்டுமான பணிகளுக்காக மண்ணின் தன்மையை பரிசோதிக்கும் வகையில் மண் ஆய்வு செய்யவும், மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் பணிகளுக்காகவும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு 50 மீட்டருக்கு ஒரு இடம் வீதம் தேர்வு செய்யப்பட்டு ராட்சத இயந்திரங்களை கொண்டு குழிகள் அமைக்கப்பட்டு மண்ணின் தன்மை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,`ஈரோட்டில் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் பெருந்துறை ரோட்டில் காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை புதியதாக 300 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.அதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. திண்டல் வரை ரோட்டில் ராட்ச இயந்திரங்களை கொண்டு மண்ணின் தன்மை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நடத்தப்படும்.

இந்த மேம்பாலம் காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் வித்யாநகர் மேடு வரை 5.5 கி.மீ. அமையவுள்ளது. மேலும், புதிதாக கட்டப்படும் பாலம் 11 மீட்டர் அகலத்தில் இருக்கும். இதில் நடைபாதை வசதி இருக்காது. மின்விளக்கு வசதிகளும், தண்ணீரை வெளியேற்றும் வசதிகளும் இருக்கும். பெருந்துறை, கோவை செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த மேம்பாலத்தின் வழியாக செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Erode ,Thindal ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...