×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் காலை வாரியது நெல்... கை கொடுத்தது எள்

ஆர்.எஸ். மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை இல்லாமல் நெல் விவசாயம் காலை வாரியதால், தற்போது எள் விவசாயம் கை கொடுத்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் பகுதியான ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை இல்லாமல் நெல் விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. இந்த ஆண்டும் போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் நெல் பயிர்கள் கருகிவிட்டன. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் எள் விவசாயம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது செங்குடி பூலாங்குடி, வாணியக்குடி, பிச்சானாகோட்டை, அரியான்கோட்டை, பனிதிவயல், வண்டல், சவேரியார் பட்டிணம், செங்கமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமாக எள் விவசாயம் நடைபெற்று வருகிறது. எள் விவசாயம் செய்வதற்கு அதிகப்படியான தண்ணீர் தேவை இல்லை. ஈரப்பதம் மட்டுமே போதும் என்பதால் கடந்த மாதம் பெய்த சிறுமழையில் எள் விதைக்கப்பட்டு விவசாயம் செழித்து வளர்ந்து வருகிறது. இதனைப் பார்த்த விவசாயிகள் கொஞ்சம் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி கர்ணன் கூறுகையில், ‘நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக நெல் விவசாயத்தில் அடைந்த நஷ்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு கருகிய பயிர்களை அழித்து விட்டு அதில் எள் பயிரிட்டுள்ளோம். ஏதாவது கொஞ்சம் விளைந்தால் எங்களுடைய குடும்பங்களை காப்பாற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். நெல் விவசாயம்தான் முற்றிலும் பாதித்து விட்டது என்றால் அதற்கு அடுத்து நம்பி இருந்த மிளகாய்க்கும் தண்ணீர் இல்லாமல் செடிகள் வாடி வருகின்றன. இந்த எள் விவசாயமே விவசாயிகளுக்கு தற்சமயம் கை கொடுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அதற்கும் சிறு மழையாவது தேவைப்படும் எல்லாம் வர்ண பகவான் கையில்தான் உள்ளது. இந்த விவசாயமும் பொய்த்துவிட்டால் நாங்கள் விவசாயத்தை மறந்துவிட்டு ஊரை காலி செய்துவிட்டு பிளைப்பு தேடி வேறு எங்காவதுதான் செல்ல வேண்டும்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,RMMangalam , RS Mangalam,Sesame , no rain,paddy farming
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...