×

ஓசூர் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறி பயிர்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்: விவசாயிகள் பீதி

ஓசூர்: ஓசூர் அருகே முகாமிட்டு அட்டகாசம் செய்து வரும் யானைகள், பொங்கல் பண்டிகை அறுவடைக்கு தயாராக உள்ள காய்கறிகளை துவம்சம் செய்து வருவதால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள யானைகள், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. இதில், ஓசூர் வனச்சரகத்திற்குட்பட்ட சானமாவு வனப்பகுதியில் 2 மாதங்களுக்கும் மேலாக 70 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் வனத்தில் இருந்து வெளியே வந்த யானைகள், பார்த்தக்கோட்டா ஊருக்குள் புகுந்து தக்காளி தோட்டத்தை துவம்சம் செய்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை அம்பலட்டி பகுதிக்கு வந்த யானைகள், அங்கிருந்த தக்காளி, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். இதையடுத்து, கீரனப்பள்ளி வழியாக தென்பெண்ணை ஆற்றை கடந்து பார்த்தக்கோட்டாவிற்கு யானை கூட்டம் குட்டிகளுடன் ஓட்டம் பிடித்தன. அங்குள்ள வெங்கட்ரமணசுவாமி கோயில் பகுதியில் சற்று இளைப்பாறிய யானைகள், ராமபுரம், நாயக்கனப்பள்ளியை தாண்டி போடூர்பள்ளம் பகுதிக்கு விரைந்தன. ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட யானைகள் வயல்வெளிகளை கடந்து சென்றதால் புழுதி பறந்தது.

அதேவேளையில், இந்த யானைகள் இரவு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் வரலாம் என்ற தகவல் பரவியதால் கிராம மக்களிடையே பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஆழியாலம், கோத்தசந்திரம், பேரண்டப்பள்ளி, அம்பலட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்லும்போதும், வனத்தையொட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வோரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : vegetable crops ,Hosur ,Haroram , Hosur, wild elephants and farmers
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்