×

அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி திமுக ஆட்சிக்கு வர தொடக்கப்புள்ளி வைப்பீர்: இள்ளலூர் ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள்

சென்னை: கேடு கெட்ட அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், தி.மு.க. ஆட்சிக்கு  வர தொடக்கப்புள்ளி வையுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
திருப்போரூரை அடுத்த இள்ளலூரில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். திருப்போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இதயவர்மன் வரவேற்றார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: பேரறிஞர் அண்ணா மக்களிடம் செல், மக்களிடம் சேர், மக்களுக்கு சேவகம் புரி என்ற தத்துவத்தை அடிப்படையாகச் சொன்னார். அதேபோன்று கலைஞர் ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணி செய், ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கு தேவையானது கிடைக்க போராடு என்றார்.

இப்படி இரு பெரும் தலைவர்களின் வழியில் நடைபோடும் தி.மு.க. தற்போது இந்த ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தி தமிழ்நாடெங்கும் மக்களை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் எடப்பாடி ஆட்சி, இதற்கு முட்டுக்கொடுத்து காப்பாற்றும் மத்திய மோடி ஆட்சி இரண்டையும் அகற்றுவதுதான் நீங்கள் வைக்கப்போகும் முற்றுப்புள்ளி. அதற்கு மாற்றாக, தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க நீங்கள் செலுத்தப்போகும் வாக்குதான் நாட்டில் நல்லது நடப்பதற்கான தொடக்கப்புள்ளி. இப்படி மக்களை நேரடியாக சந்திக்க தி.மு.க.வைத் தவிர வேறு எந்த கட்சியாலும் தமிழகத்தில் முடியாது. இந்த கூட்டங்களை பார்த்து சிலருக்கு ஆத்திரம், எரிச்சல், கோபம் வருகிறது. கூட்டமே வரவில்லை என்று பேட்டிகளில் உளறுகின்றனர்.

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்ற முழக்கமே அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் வரும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களுக்கு இங்கு வந்திருக்கிற பெண்களுக்கு இருக்கிறது. இன்னும் 4 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் மட்டும் வரப்போவதில்லை. அத்தோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலும் வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் பேசத்தொடங்கி விட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம். கவிழ வேண்டிய, மெஜாரிட்டி இல்லாத இந்த ஆட்சியை முட்டுக்கொடுத்து காப்பாற்றி வரும் மோடி ஆட்சி மீண்டும் வராது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. வரவே முடியாது. அதனால் தமிழ்நாட்டில் உள்ளே நுழைய அ.தி.மு.க. மூலம் முயற்சிக்கிறது.

மத்தியில் நடக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சி தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கிறது. ஆரம்பம் முதல் நாடாளுமன்றத்தில் இறுதி வரை தி.மு.க. எதிர்த்து பேசி வாக்களித்திருக்கிறோம். ஆனால் ஆட்சியில் இருக்கிற அ.தி.மு.க. வெளிநடப்பு செய்து கபடநாடகம் நடத்தி இருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்க சட்டமன்றத்தில் போடப்பட்ட தீர்மானம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஆனால் தர்மபுரி பேருந்து எரிப்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்யப்படுகின்றனர். இந்த கேடு கெட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தி.மு.க. ஆட்சிக்கு தொடக்கப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், நகர செயலாளர் தேவராஜ், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வீ.தமிழ்மணி, டி.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிவாஜி கூட தோற்றுவிடுவார்
ஸ்டாலின் பேசுகையில், ‘கடந்த 8 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் விரல் விட்டு ஒரு சாதனையை சொல்ல முடியுமா?. ஜெயலலிதா இறந்த பிறகு அவரது பெயரைச் சொல்லி ஆட்சியில் ஒட்டிக்கொண்டுள்ளனர். தொழில் தொடங்க வருபவர்கள் வேறு மாநிலங்களை நோக்கி ஓடுகின்றனர். அந்தளவுக்கு கமிஷன், கரப்ஷன் ஆட்சியாக இந்த ஆட்சி விளங்குகிறது. இருக்கும்போது ஜெயலலிதா முன்பு நடித்தவர்கள், பதவி ஏற்கும்போது அழுதவர்கள் இப்போது நடிப்பு மன்னர்களாகி விட்டனர். சிவாஜி கூட இவர்கள் முன்பு தோற்று விடுவார். ஜெயலலிதா செத்த பிறகும் அவரது சாவில் மர்மம் உள்ளது என்று கூறி விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர். இந்த கமிஷனே ஒரு நாடகம்தான். ஒரு மந்திரி இந்த கமிஷனை நம்பாமல் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறார். உங்களால் செத்துப்போன ஜெயலலிதாவுக்கு ஒரு புகழஞ்சலி கூட்டம் கூட நடத்த முடியவில்லை.

சோடா குடிக்கிறீர்களா? ஸ்டாலின் கேள்வி
இள்ளலூர் ஊராட்சி சபை கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள குறைகள் குறித்து பேசினர். சில பெண்கள் தி.மு.க. ஆட்சி வந்ததும் மதுக்கடைகளை மூடுவீர்களா என்று ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே மது ஒழிப்புதான் என்று பதிலளித்தார். ஒரு பெண் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் அவலங்களை பட்டியலிட்டதோடு, தனக்கு வந்த மாதாந்திர பென்சனை நிறுத்தி விட்டதாக கூறினார். அவரின் நீண்ட நேர உரையை கேட்ட ஸ்டாலின், சோடா குடிக்கிறீர்களா? என்று கேட்டதோடு, இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் பெண்கள் விழிப்புணர்வுடன் இருப்பதோடு தினந்தோறும் நடப்பவைகளை விரல் நுனியில் வைத்திருப்பதாகவும் கூறி பாராட்டினார்.

மு.க.ஸ்டாலின் திடீர் சோதனை
இள்ளலூர் ஊராட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் அனைத்து நிர்வாகிகளின் பெயர்களையும் வாசித்து அனைவரும் வந்திருக்கிறார்களா என்று கேட்டு சோதனை செய்தார். வராதவர்கள் ஏன் வரவில்லை என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,council ,DMK ,Mulasthan ,meeting ,Italur , AIADMK regime, DMK regime, Panchayat council meeting, MK Stalin
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்