காயங்களால் அவதி - டென்னிசில் இருந்து ஓய்வு பெறுகிறார் மர்ரே

மெல்போர்ன்: இங்கிலாந்து டென்னிஸ் நட்சத்திரம் ஆண்டி மர்ரே, இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மும்மூர்த்திகளான பெடரர், நடால் ஜோகோவிச் ஆகியோரின் கடும் போட்டியை சமாளித்து கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் மர்ரே (31 வயது). உலகின் நம்பர் 1 வீரராகவும் இருந்துள்ளார். வலது பக்க இடுப்பில் ஏற்பட்ட காயத்துக்காக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்தார்.

இந்த நிலையில், 2019 டென்னிஸ் சீசனின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் அவர் களமிறங்க உள்ளார். போட்டி தொடங்க சில தினங்களே உள்ள நிலையில், மெல்போர்னில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மர்ரே கூறியதாவது: அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகும் வலி குறையவில்லை. மிகுந்த சிரமத்துக்கிடையே விளையாடத் தயாராகி இருந்தாலும், சில ஷாட்களை விளையாடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். வலியுடன் எத்தனை நாள் போராடுவது என்ற எண்ணமே சோர்வை தருகிறது. விம்பிள்டன் தொடரில் விளையாடி விடைபெறவே விரும்புகிறேன் என்றாலும், இன்னும் ஐந்து மாதத்துக்கு தாக்குப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் தான் எனது கடைசி போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு மர்ரே கூறியுள்ளார். பேட்டியின்போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட மர்ரே வார்த்தைகள் வராமல் தடுமாறியதுடன் பொங்கிவந்த கண்ணீரை அடக்க முடியாமல் எழுந்து சென்றார். சற்று நேரத்துக்கு பின்னர் மீண்டும் திரும்பி வந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஆஸி. ஓபன் முதல் சுற்றில் அவர் ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா அகுத்துடன் (22வது ரேங்க்) மோதுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>