புதுடெல்லி: சாரதா சிட்பண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.4 கோடி பணம் பெற்று, குற்ற சதியில் ஈடுபட்டதாக நளினி சிதம்பரம் மீது சிபிஐ நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென். முதலீட்டு பணத்துக்கு அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி வசூலித்தார். செபி, கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம் (ஆர்ஓசி) ஆகியவற்றின் விசாரணைகளை சமாளிப்பதற்காக முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வக்கீலுமான நளினி சிதம்பரத்திடம், சுதிப்தா சென்-ஐனை, முன்னாள் மத்திய அமைச்சர் மாதங் சிங்கின் பிரிந்து சென்ற மனைவி மனோரஞ்சனா அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை சாரதா குரூப் நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு வகைகளில் ரூ.1.4 கோடி நளினி சிதம்பரம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல் கடந்த 2013ம் ஆண்டு சாரதா சிட்பண்ட் நிறுவனம் மூடப்பட்டது. இந்த மோசடி வழக்கை சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு ஒப்படைத்தது. கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 5 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், நளினி சிதம்பரம் மீது சிபிஐ நேற்று 6வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இது குறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறுகையில், ‘‘மக்களை ஏமாற்றவும், சாரதா குரூப் நிறுவனங்களின் பணத்தை மோசடி செய்யும் நோக்கத்திலும் மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து நளினி சிதம்பரம் குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளார்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி