×

பத்திரிகையாளர் கொலை வழக்கு தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் ரகீம் குற்றவாளி என தீர்ப்பு

பஞ்ச்குலா: அரியானாவில் பத்திரிகையாளர் கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் ரகீம் சிங் உட்பட 4 பேரை டெல்லி சிபிஐ நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை 17ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
அரியானா மாநிலம், சிர்ஷாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பு செயல்படுகிறது. இந்த மடத்தின் மடாதிபதி குர்மித் ராம் ரகீம் சிங். இவர் பெண் சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் இவருக்கு 2017ல் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இவர், ரோடக் என்ற இடத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கும் உள்ளது. இவரது மடத்துக்கு வரும் பெண்கள் எவ்வாறு பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர் என ஒருவர் எழுதிய கடிதத்தை ‘பூரா சச்’ என்ற பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. இதை வெளியிட்ட பத்திரிகையாளர் ராம் சந்திர் சத்திரபதி, கடந்த 2002ம் ஆண்டு அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் குர்மித் ராம் ரகீம் முக்கிய குற்றவாளியாகவும், குல்தீப் சிங், நிர்மல் சிங் மற்றும் கிருஷ்ணன் லால் ஆகியோரும் குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டனர்.

 இந்த வழக்கு கடந்த 2006ம் ஆண்டு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், குர்மித் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் நீதிபதி குற்றவாளிகளாக அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 17ம் தேதி அறிவிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gurmi Ram Rakem ,Tera Chacha Chaudhaya , Journalist Killed, Dera Chacha Chaudhha, Gurmit Ram Raheem Singh, Guilty
× RELATED மானாமதுரை வங்கியில் கொள்ளை முயற்சி:...