×

தி.மலையில் இருந்து கர்நாடகாவுக்கு பிரம்மாண்ட சாமி சிலையை கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவுக்கு பிரம்மாண்ட சாமி சிலையை கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்படாத பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. இதையொட்டி, கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 7ம் தேதி சிலையின் பயணம் தொடங்கியது. பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு திருவண்ணாமலை வந்த பெருமாள் சிலை, சில தினங்களுக்கு முன் கிரிவலப்பாதையில் இருந்து திண்டிவனம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கம் நோக்கி சென்றது. ஆனால், மிதமிஞ்சிய எடை மற்றும் பிரமாண்டமான அளவு காரணமாக, சிலை செல்லும் வழியெல்லாம் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாது சிலை செல்ல வழி ஏற்படுத்துவதற்காக வீடுகளும் கடைகளும் இடிக்கப்படுவதால், மக்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இந்த பிரம்மாண்ட சாமி சிலையை கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இதுகுறித்து முறையீடு செய்துள்ளார். 350 டன் எடையுள்ள சிலையை கொண்டு செல்வதால் சாலைகள், வீடுகள் சேதமடைவதாக அவர் கூறியுள்ளார். இதற்காக சில புகைப்பட ஆதாரங்கள் மற்றும் செய்தித்தாள்கள் தாக்கல் செய்துள்ளார். மேலும், அந்தந்த மாவட்ட நிர்வாகம் தரப்பில் எவ்விதமான முறையான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சிலை எடுத்து செல்லப்படுவதால் அதனை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து செய்தித்தாள் தகவலின்படி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், உரிய முறையில் மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,Sami ,Karnataka , Thiruvannamalai, Karnataka, Perumal Statue, High Court
× RELATED ராஜினாமா செய்யாமல் வேட்புமனு தாக்கல்...