உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும்: தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம்

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், “சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்கலாம்’’ என கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் கடந்த 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.  இந்த நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மற்றும் ஆலையை திறக்க தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு மனு ஆகிய இரண்டையும் உச்சநீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து, டெல்லியில் பேட்டியளித்த ஸ்டெர்லைட் தலைமை செயலதிகாரி ராம்நாத், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மீண்டும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை அணுக உள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு 2 கோரிக்கை மனுக்களை வேதாந்தா நிறுவனம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் சில வழிமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தீர்ப்பும் வழங்கியுள்ளது. எனவே, அந்த 25 வழிமுறை மற்றும் பரிந்துரைகளை நாங்கள் பின்பற்ற வேண்டுமானால், ஆலைக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி தேவை. இதனால், ஆலைக்கு வைக்கபட்டுள்ள சீலை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோல எங்கள் நிறுவத்திற்கு உடனடியாக மின்சார இணைப்பையும் வழங்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ஜனவரி 5ம் தேதியே வேதாந்தா நிறுவனத்திற்கு போடப்பட்டுள்ள சீல் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை அந்த சீல் அகற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த 2 மனுக்கள் மீதும் சட்ட ஆலோசனை கேட்பதற்காக மனுக்களை தமிழக அரசானது, தலைமை வழக்கறிஞர் விஜயநாராயனணுக்கு அனுப்பி வைத்துள்ளளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்ட ஆலோசனைக்குப் பிறகு இம்மனுக்கள் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா அரசின்...