அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த 20 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை :  அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் 3 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை உயர்நீதிமன்றக்கிளை அமைத்துள்ளது. ஜன.15ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது. முன்னதாக நீதிமன்றம் அமைக்கும் விழாக்குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என உயர்நீதிமன்றக் கிளை அறிவித்தது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே குழுவில் உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவின் தலைவர், தனிச்சையாக செயல்படுவதாக கூறிய மதுரையை சேர்ந்த முனியசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதுகுறித்த அவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி வரும் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அவனியாபும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவின் தலைவராக உள்ள கண்ணன், அதுதொடர்பான கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை.

யாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழா போல தனிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார். இந்த நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கேற்பும் குறையும்.ஆகவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் சார்பாக அனைத்து சமூக பிரதிநிதிகள் பங்களிப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

நீதிபதிகள் வேதனை

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாதி, மதங்களை கடந்து இளைஞர்களும், பொதுமக்களும் குடும்பத்துடன் இரவு பகலாக போராடி ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றனர். இதில் பலரும் தாக்குதலுக்கும் உள்ளாகினர். அவ்வாறு அனுமதி பெறப்பட்ட ஜல்லிக்கட்டில், ஜாதி மதத்தைத் திணித்து, பலரும் சுய கவுரவம் அடைய நினைப்பது வேதனையாக உள்ளது, இதை ஒருபோதும் ஏற்க இயலாது என கூறினார்.

வழக்கு முதலாம் அமர்வுக்கு மாற்றம்

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை முதலாம் அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கிராமத்தினரிடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்றால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடும் எச்சரிக்கை விடுத்தது. பின்னர் நீதிமன்றம் அமைக்கும் விழாக்குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என உயர்நீதிமன்றக் கிளை அறிவித்தது. தொடர்ந்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஒரு ஆணையரை நியமிப்போம் என்றும் ஆணையர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் ஆணையர், விழா குழுவினர் குறித்த விவரங்கள், பாதுகாப்பு மற்றும் இதர விவரங்கள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கினை ஒத்திவைத்தது.

20 பேர் கொண்ட நீதிமன்ற கண்காணிப்பு குழு அமைப்பு

இந்த வழக்கு இன்று நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஜன. 15-ல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்று அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதையடுத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் 3 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை உயர்நீதிமன்றக்கிளை அமைத்தது.

அவனியாபுரம் கிராம மக்கள் 16 பேரை கொண்ட ஆலோசனைக் குழுவையும் அமைத்து, 16 பேர் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  இதனிடையே குழுவில் இடம்பெற்றுள்ள யாருக்கும் முதல்மரியாதை அளிக்க கூடாது என்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் யாருக்கும் முதல் மரியாதை தரக்கூடாது என்றும் நீதிபதி வலியுறுத்தி உள்ளார்.தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்காக வழங்கப்படும் பரிசுப் பொருட்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: