×

கோவை மாநகரில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டுகிறது : வெல்லம் விலை உயர்வு

கோவை: கோவை மாநகரில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டுகிறது. மண்பானை, வெல்லம் விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை கடை வீதிகளில் பொங்கல் பானை, பச்சரிசி, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், பொங்கல் பூ, ஆவாரம்பூ உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை நேற்று முதல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டுக்கு தாராபுரம், பழனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பொங்கல் பூ ஒரு கட்டு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், ஆவாரம்பூ ஒரு கட்டு 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொங்கல் பானைகள் குறைந்தபட்சம் ரூ.120 முதல் அதிகபட்சம் ரூ.280 வரை விற்கப்படுகிறது. வர்ணம் தீட்டப்பட்ட மண்பானை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுகிறது. ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது. இவ்வகை பானைகள், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. கோவை ரங்கே கவுடர் வீதி, டி.கே மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் விற்பனை விறு விறுப்படைந்துள்ளது. இதுகுறித்து வெல்லம் வியாபாரிகள் கூறியதாவது:  சேலம், மதுரை, கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு வெல்லம் கொண்டுவரப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் ரூ.45 முதல் ரூ.55 வரை விற்கப்பட்டது.

இது, பொங்கல் பண்டிகை நெருங்கும்போது ரூ.60 வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு வெல்லம் வகைகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இதுதவிர, கரும்பு சர்க்கரை கிலோ ரூ.40, தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.160, பனங்கருப்பட்டி கிலோ ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பொருட்களின் விலை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உயர்ந்து இருந்தாலும், தேவை இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.   பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கோவைக்கு இன்னும் செங்கரும்பு வரத்து இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் வந்து குவியும், கண்டிப்பாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 முதல் 40 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore , Coimbatore, Pongal Festival, Jaggery
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு