×

சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை மேரி கோம் முதலிடம்!

புதுடெல்லி: சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்பவர் மேரி கோம். 36 வயதாகும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றாலும், இவர் அபாரமாக விளையாடி வருகிறார். எனவே கடந்த 2010ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து நடந்த 5 சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கம் வென்றார்.

கடந்தாண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்தார். இதனால் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அயர்லாந்து நாட்டு வீராங்கனை கேட்டி டெய்லருக்கு இணையாக பதக்கங்களை குவித்திருந்த மேரி கோம் இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் அதிக பதக்கங்களை குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதேபோன்று கடந்த 2018ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டி மற்றும் போலந்து நாட்டில் நடந்த சைலேசியன் ஓபன் குத்துச்சண்டை போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும், பல்கேரியாவில் நடந்த ஸ்டிராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கமும், கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். இந்நிலையில், சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு, உலக குத்துச்சண்டை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 45 முதல் 48 கிலோ லைட் பிளை பிரிவில் இடம்பிடித்துள்ள மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 36 வயதான மேரிகோம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவு இல்லாததால் 51 கிலோ பிரிவில் மோத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mary Kom ,India ,International Boxing Federation , International Boxing Association,Mary Kom,First
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!