×

அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்

திருச்சி: அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  `மக்களிடம் செல்வோம்... மக்களிடம் சொல்வோம்... மக்களின் மனங்களை வெல்வோம்...’ என்ற முழக்கத்தை முன்வைத்து தி.மு.க. சார்பில் 12,671 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சி வில்வனம்படுகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதைத்தொடரந்து, தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை, மாதாக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி சபை கூட்டங்கில் கலந்து கொண்டார். இதையடுத்து, 2ம் நாளான நேற்று, திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டியில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

அங்குள்ள கோயில் முன் பந்தல் அமைக்கப்பட்டு, மக்கள் அமர வசதியாக விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தது. இதற்காக, காலை 8.30 மணியில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் பந்தலுக்கு வந்து அமர்ந்தனர். திருச்சி சங்கம் ஓட்டலில் தங்கி இருந்த மு.க.ஸ்டாலின், சீகம்பட்டிக்கு காரில் வந்தார். பின்னர், மரத்தடியில் கூட்டத்தை தொடங்கிவைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆரவாரத்தோடு, எழுச்சியோடு பெண்கள் அதிகளவில் வந்திருப்பது எங்கள் மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தமிழகத்தில் நடக்கும் அடிமை, அக்கிரம, அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் தொடக்கப்புள்ளியாக தி.மு.க. ஆட்சி அமையும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் திட்டமிட்டு தேர்தலை நடத்தவில்லை. ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் இருந்திருந்தால், உங்கள் பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கும். உள்ளாட்சி தேர்தலை நடத்தினால், தி.மு.க. வெற்றி பெற்று விடும் என நினைத்து தேர்தலை நடத்தாமல் உள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை காரணம் காட்டி, குளறுபடி ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் உள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. ஆனால், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை நடத்துபவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆட்சிக்கு வர முடியாது என நினைத்து இருக்கும் வரை சுருட்டிக்கொள்ள திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

எச்.ஐ.வி. ஒரு மோசமான வியாதி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. ரத்தம் அளித்த வாலிபர் அதே மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது அந்த வாலிபரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார். எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணியின் குடும்பம் நிர்க்கதியாய் தவிக்கிறது. அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி. பரவ வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் தமிழகம் உள்ளது. இதன்மூலம் மோசமான ஆட்சி நடந்து வருவதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறுகிறார்கள். சுட்டுப்போட்டாலும் தாமரை மலர வாய்ப்பில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பெண்கள் சொந்தகாலில் நிற்க நடவடிக்கை எடுப்பேன்..
சீகம்பட்டி ஊராட்சி சபை கூட்டத்தை முடித்துக்கொண்டு பகல் 12 மணிக்கு மணிகண்டம் ஒன்றியம் நவலூர்குட்டப்பட்டு ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளீர்கள். பெண்கள் சலசலப்பின்றி அமர்ந்திருப்பதுதான் நமக்கு வெற்றி. 5 மாதத்தில் எம்.பி. தேர்தல் வருகிறது. அதனுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால் நாடு உருப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மேம்படுத்தப்படும்.

அந்த பொறுப்பை நானே வைத்துக்கொண்டு பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து நவலூர் குட்டப்பட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் சிறிது ஓய்வுக்கு பின் மாலை 4.50 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK , AIADMK regime, DMK regime, local elections
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...