×

நடுக்கடலில் பிணை கைதிகளாக பிடித்த கடற்கொள்ளையர்கள் : ஈரானில் குமரி மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு

நாகர்கோவில்: ஈரானில் குமரி மாவட்ட மீனவர்கள் மூன்று பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த சகாயபீட்டர்(45), பொழிக்கரையை சேர்ந்த அமுதம் கார்மல் என்ற சுதர்சன் (43), கொல்லங்கோட்டை சேர்ந்த கிறிஸ்து அடிமை(23) ஆகியோர் சவுதி அரேபியாவில் ஜாபர் அல்பான் என்ற முதலாளியின் விசைப்படகில் மீன்பிடித்து வந்தனர். அதன்படி கடந்த ஜனவரி 2ம் தேதி சவுதி அரேபியா தரீன் என்ற இடத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர். 5ம் தேதி சவுதிஅரேபியா கடல் பகுதியில் ஈரான் நாட்டு கடற்கொள்ளையர்களுக்கும், சவுதி அரேபியா கடலோர காவல் படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இதில் சவுதி அரேபியா கடலோர காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் ஈரான் கடற்கொள்ளையர்கள் ஈரானுக்கு தப்பி செல்லும்போது, வழியில் மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர்களை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களின் விசைப்படகையும் கொண்டு சென்றனர். பின்னர் ஈரான் கடற்கொள்ளையர்கள் குமரி மீனவர்களை பிஸ்ஸர் என்ற கடற்பகுதியில் விட்டுவிட்டு தப்பிசென்றனர். இந்த மீனவர்களை ஈரான் கடலோர கடற்படையினர் மீட்டனர். விசாரணை கைதிகளாக அவர்களை சிறை வைத்துள்ளனர். இந்தநிலையில் இந்த தகவல்களை சகாயபீட்டர் ஊரில் உள்ள தனது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து தங்களை காப்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியால் சவுதி அரேபியா அரசு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக, கேரளா, இலங்கை, பங்களாதேஷ் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுத்துள்ளது. இந்தநிலையில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 3 பேரையும் ஈரான் கடற்படையினர் சிறை வைத்துள்ளனர். தமிழக அரசும், மத்திய அரசும் சிறைபிடிக்கப்பட்டுள்ள குமரி மீனவர்களை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pirates ,Kumari Fisher , pirates, Iran, fishermen
× RELATED புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான்