×

படவேடு ஆற்றில் திடீர் வெள்ளம் : செண்பகத்தோப்பு அணையில் இருந்து நள்ளிரவில் தண்ணீர் திறப்பு

கண்ணமங்கலம்:  திருவண்ணமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஆற்றில் நேற்று காலை திடீரென வெள்ளம் வந்தது. மழை பெய்யாமல் ஆற்றில் எப்படி வெள்ளம் வருகிறது என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த பொதுமக்கள், அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த பணியாளர்களிடம் யார் உத்தரவின்பேரில், அணையை திறந்தீர்கள்? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பணியாளர்கள் பதில் கூறாமல் தவிர்த்துவிட்டார்களாம். அப்போது பொதுமக்கள், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு எச்சரித்தனர்.

இதையடுத்து, தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு 34 கோடியில் கட்டப்பட்ட செண்பகத்தோப்பு அணை இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. மீன்களை வளர்க்கும் குளமாக மாறிப்போயுள்ளது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் மீன்களை பிடிப்பதற்காக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அணையை திறந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், ஆற்றின் வழியாக செல்லும் மாணவர்கள் எதிர்பாராத வெள்ளத்தால் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : river ,Padavedu ,Shenbagathoppu Dam , Patavare river, Shenbagathapai dam, water
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை