×

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையால் பாக்குமட்டை தட்டுக்கு மவுசு அதிகரிப்பு

நாமக்கல்: ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த 1ம் தேதி முதல் ஓட்டல் கடைகள், டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பேக்கரியில் பிளாஸ்டிக் டம்ளர், கேரிபேக், தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளில் வாழை இலை, பாக்கு மட்டைகளில் இறைச்சியை கட்டி கொடுக்கிறார்கள். ஓட்டல்களில் டிபன், சாப்பாடு பார்சல்கள் சில்வர் பாத்திரங்களில் வழங்கப்படுகிறது. இதனிடையே, பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பாக்கு மட்டை தட்டுகளின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பகுதியில் பாக்குமரங்கள் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு பாக்குமரத்தில் இருந்து ஆண்டுதோறும் 7 மட்டைகள் காய்ந்து கீழே விழும். இதை வியாபாரிகள், புரோக்கர்கள் சேகரித்து வந்து பாக்கு மட்டை தட்டு உற்பத்தி செய்பவர்களிடம் விற்பனை செய்கிறார்கள்.

இந்த மட்டைகளை தண்ணீரில் நனைய வைத்து, பிறகு அதை உலர வைத்து, ஹைட்ராலிக் மெஷின் உதவியுடன் பல்வேறு அளவுகளில் தட்டுகள் தயாரிக்கப்படுகிறது. நாமக்கல் பகுதியில் பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் தனியார் நிறுவனங்களில், தற்போது தட்டுகள் கேட்டு ஆர்டர்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இதுகுறித்து நல்லிபாளையத்தில் பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் பிரபாகரன் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாக்கு மட்டை தட்டுகள் தயாரித்து வருகிறோம். சமீபகாலமாக இந்த தட்டுகள் மீது மக்களுக்கு மோகம் அதிகரித்துள்ளது. திருமணம், வீடு கிரகபிரவேசம் போன்ற சுபகாரியங்களில் உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து பரிமாற வாழை இலை அதிகம் பயன்படுத்தி வந்தாலும், அதற்கு இணையாக பாக்குமட்டை தட்டுகளும் தற்போது புழக்கத்தில் வந்துள்ளது. இந்த தட்டுகளை பயன்படுத்தும் போது, உணவு பொருட்கள் விரயமாவது தடுக்கப்படும். தேவைக்கேற்ப மட்டும் பரிமாறிக் கொள்ள முடியும். இதற்காக 12 இன்ச் முதல் தட்டு தயாரிக்கிறோம்.

டிபன் பரிமாற 10 இன்ச் தட்டுகளும், கோயில்களில் அன்னதானம் போட 8 இன்ச் தட்டுகளும், சாலையோர கடைகளில் பானிபூரி சாப்பிட 6 இன்ச் மூடிகள் என பல வடிவங்களில் தட்டுகள் தயாரிக்கப்படுகிறது. பாக்கு மட்டை தட்டுகளை ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அதை மொத்தமாக குழி தோண்டி புதைத்து விட்டால், எளிதில் மக்கி விவசாய நிலங்களுக்கு உரமாகி விடும். இதனால் இந்த தட்டுகளை நிறைய பேர் விரும்பி வாங்குகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலியால், தற்போது பாக்குமட்டை தட்டுகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. சிறிய தட்டு ஒன்று 1.50க்கும் பெரிய தட்டு 3.75 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொல்லிமலை, ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், பாக்கு மட்டைகளை நாமக்கல்லை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Plastic, pacific, plate
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி,...