×

குட்கா வழக்கில் தவறான தகவல் அளித்தாரா? தலைமைச்செயலாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கு

மதுரை: குட்கா வழக்கில் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்ததாகக் கூறி, தலைமை செயலாளர் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: குட்கா முறைகேடு தொடர்பாக கடந்த 2016ல் சென்னை குட்கா நிறுவன குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது போலீசார் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு லஞ்சமாக பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். அதில், டிஜிபி ராஜேந்திரன் (அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர்), சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது பெயர் உள்ளிட்ட விபரங்கள் இருந்தன.
இதுகுறித்து அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ், அப்போதைய டிஜிபி அசோக்குமார் ஆகியோரிடம் வருமான வரித்துறை முதன்ைம ஆணையர் ஒரு கடிதம் அளித்தார். அதில், குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தார்.

இந்த கடிதத்தை டிஜிபி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி நான் ஏற்கனவே மனு செய்திருந்தேன். விசாரணையின்போது, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை என கூறியிருந்தார். இதையடுத்து, எனது வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. இதனிடையே சென்னை போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டில் கடந்த 2017ல் வருமான வரித்துறை நடத்திய சோதனையின் போது, குட்கா முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறை முதன்ைம ஆணையரின் கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன. நுண்ணறிவுப்பிரிவு டிஜிபியாக இருந்த ராஜேந்திரனுக்கு, டிஜிபி பதவி வழங்குவதற்காகவே அந்த ரகசிய ஆவணம் மறைக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தவறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gudka ,chief secretary , Gudka ,false, case?,against, chief secretary
× RELATED சென்னையில் கடந்த ஒரு வாரத்தில்...