×

பொங்கல் பண்டிகைக்காக 14,263 சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: பொதுமக்கள் அரசு பஸ்களில் செல்ல அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு

சென்னை: பொங்கல் சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வருகிற 15ம் தேதி (செவ்வாய்) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு நாளை முதல் 14,263 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இதற்காக 30 சிறப்பு முன்பதிவு மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று காலை 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தினசரி இயக்கக்கூடிய 2,275 பேருந்துகளை தவிர சிறப்பு பேருந்துகளாக தினசரி 5,163 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து மட்டும் பொங்கல் பண்டிகை வரை  மொத்தம் 14,263 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து 10,445 சிறப்பு பேருந்து என மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படும்.பயணிகள் வசதிக்காக, ஆந்திரா செல்லும் பயணிகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், இசிஆர் மார்க்கமாக பாண்டிச்சேரி, கடலூர் செல்பவர்கள் கே.கே.நகர் அரசு போக்குவரத்து நிலையத்தில் இருந்தும்,  விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் வரை செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்தும், திண்டிவனம், திருவண்ணாமலை, திருச்சி செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்  நிலைய பேருந்து நிலையத்தில் இருந்தும், வேலூர், ஆரணி, ஆற்காடு, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், தென்மாவட்டங்களான திண்டிவனம், விழுப்புரம், மதுரை,  நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இந்த ஆண்டும் திருவண்ணாமலை செல்பவர்கள் வசதிக்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும்  இயக்கப்படும்.போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோயம்பேட்டில் இருந்து செல்லும் பேருந்துகள் மதுரவாயல், நசரத்பேட்டை வழியாக வண்டலூர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெருங்களத்தூர் பகுதியில்  போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். அதேபோல ஊரப்பாக்கத்தில் சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்கள் அங்கிருந்து பயணம் செய்யலாம்.
கார்களில் பயணம் செய்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். இதை  பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கு திரும்பவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 20,185 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த ஆண்டு 24,708 பேருந்துகள்  இயக்கப்படும்.எதிர்பார்க்கும் அளவுக்கு மேல் பயணிகள் எவ்வளவு பேர் வந்தாலும் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பஸ்கள் கையிருப்பில் வைத்துள்ளோம். ஆம்னி பஸ்களில்  அதிக வசூல் கட்டணம் என்ற பெரிய அளவில் புகார் இல்லை. ஆம்னி பஸ்களுக்கு நிரந்தர கட்டணம் என்று இல்லை. ஆம்னி பஸ்களில் கூட்டம் இல்லாத காலங்களில் குறைவாகவும், கூட்டம் அதிகம் உள்ள காலங்களில் அதிக  கட்டணமும் வசூலிக்கிறார்கள். அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசே 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்குகிறது. அதனால் அரசு  பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Wijepasakar ,Pongal , Pongal festival, Ticket booking ,Minister V Vijayabaskar , public buses
× RELATED பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா