×

தொடக்கப்பள்ளிகள் இணைப்பை அரசு உடனே கைவிட வேண்டும்: ஜாக்டோ-ஜியோ மனு

சென்னை: மேனிலைப் பள்ளிகளுடன் 3500 தொடக்கப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, முதல்வர் தனிப்பிரிவு மற்றும் பள்ளிக்  கல்வி முதன்மைச் செயலாளரிடம் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று மனு கொடுத்தனர். தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளை மேனிலைப்  பள்ளிகளுடன் இணைப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ நேற்று முன்தினம் உயர் மட்டக் குழு  கூட்டத்தை கூட்டி இதுகுறித்து விவாதித்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசாணை 56ல் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்  வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவை ரத்து செய்ய வேண்டும், பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை எண்கள் 100  மற்றும் 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், 5000 அரசுப் பள்ளிகளை மூடுவதை உடனடியாக கைவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் 3500 தொடக்கப் பள்ளிகளை மேனிலைப் பள்ளிகளுடன்  இணைப்பது என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதனால் 3500 சத்துணவு கூடங்களும் மூடப்படும் நிலை ஏற்படும். தலைமை ஆசிரியர்கள்  பணியிடங்களும், அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் பணியிடங்களும் ஒழிக்கப்படும் நிலை ஏற்படும். அதனால் அந்த முடிவை அரசு  கைவிட வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ கோரிக்கையாக தயாரித்துள்ளது.

மேற்கண்ட தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக தயாரித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கும் முதல்வர் தனிப்பிரிவில்  ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் நேற்று கொடுத்தனர். இதுதவிர பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவை  சந்தித்தும் மனு அளித்தனர். அப்போது, பேசிய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு  இல்லை என்று தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,primary schools ,Zakto-Geo Manu , Elementary schools, government, jacquo-geo
× RELATED பெரணமல்லூர் ஒன்றிய அளவில் 68 தொடக்கப்...