×

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : சென்னையில் உள்ள ஏரிகளில் 1.2 டிஎம்சி மட்டும் நீர் இருப்பு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளில் வெறும் 1.2டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ள நிலையில், கோடை காலம் நெருங்குவதற்கு முன்பே குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்க தொடங்கியுள்ளதால் குடிநீர் வாரிய அதிகாரிகள் விழிபிதிங்கியுள்ளனர்.
சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 800 மில்லியன் கன அடி குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 550மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே குடிநீர் வழங்கி சமாளித்து வருகிறது. இதற்காக வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் தெருக்குழாய்களில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. அவ்வாறு குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், கண்டலேறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.குறிப்பாக, சென்னையை சுற்றியுள்ள இந்த ஏரிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர் தான் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் தற்போது பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால் இந்த ஏரிகளில் வெறும் 1285 மில்லியன் கன அடி நீர்மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதுவும் மழை பெய்யாமல் வெயில் அடிப்பதால் வேகமாக ஆவியாகி வருகிறது.
 இன்னும் பருவமழை காலம் முடியாத நிலையில் குடிநீர்தட்டுப்பாடு தலை தூக்க தொடங்கியிருப்பது குடிநீர் வாரிய அதிகாரிகளை அதிர்ச்சியாக்கியுள்ளது. கோடை காலம் நெருங்கி வரும் சூழ்நிலையில், தற்போதைய நீர் இருப்பு படி பார்த்தால் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சென்னை மக்கள் இந்த ஆண்டு கோடை காலத்தில் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. அதாவது சென்னையை சுற்றியுள்ள கிணறுகள் மற்றும் கல்குவாரிகளிலிருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து விநியோகப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆய்வுகளை தொடங்கியுள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய நீர் இருப்பு
பூண்டி ஏரியில் 268 மில்லியன் கனடி நீரும், சோழவரம் ஏரியில் வெறும் 48 மில்லியன் கன அடி நீரும், புழல் ஏரியில் 884 மில்லியன் கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 85 மில்லியன் கன அடி நீர் என மொத்தம் 1,285 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4,895 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lakes ,water reservoir ,Chennai , Chennai, water balance and drinking water shortage
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!