×

என்.டி.ஆர் சரித்திரத்தை முழுமையாக வெளியிட தயாரா? லட்சுமி பார்வதி கேள்வி

திருமலை: என்.டி.ராமராவின் இறுதிக்கட்ட வாழ்க்கையை காண்பித்தால் மட்டுமே சரித்திரத்தை முழுவதுமாக வெளியிட்டதாக கருதப்படும் என்று  திருப்பதியில் லட்சுமி பார்வதி கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி பார்வதி நேற்று காலை சுவாமி  தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில மக்கள் அனைவரும்  மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். என்.டி.ராமராவ்,  ராஜசேகர ரெட்டி போன்ற நல்லாட்சி அமைய வேண்டும் எனவும், மக்களுக்கு துரோகம்,  அநியாயம் செய்யக் கூடிய இந்த அரசை அகற்றி மக்களின்  தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய நல்ல அரசு அமைய வேண்டுமென சுவாமியை வேண்டிக் கொண்டேன்.

பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியான என்.டி.ராமராவின்  வாழ்க்கை சரித்திர படம் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் என எத்தனை  பாகங்கள் எடுத்தாலும் அதில் அவர் இறுதிக்கட்ட வாழ்க்கையை காண்பித்தால் மட்டுமே அது முழுமையான படமாக இருக்கும். ஆனால்  பாலகிருஷ்ணாவால் அவ்வாறு எடுக்க முடியாது. காரணம் அவ்வாறு எடுத்தால் அதில் சந்திரபாபு நாயுடுவை வில்லனாகவோ அல்லது என்னை  வில்லியாகவோ காண்பிக்க வேண்டும். என்னை வில்லியாக காண்பித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். என்டிஆர்  வாழ்வில் நடந்த  மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் படமாக காண்பித்தால், வாழ்க்கை படமாக இருக்காது.

அவர் தனது வாழ்வின் கடைசி நேரத்தில் சிலரால் துரோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிறிய வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு தனது வாழ்க்கையை  நடத்தினார். உலக அளவில் மிகப்பெரிய நடிகராகவும் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்து  30 ஆண்டுகால சினிமா நடிகராக மக்கள் இதயத்தில்  இடம்பெற்று 35 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த  காங்கிரஸ் கட்சியை 9 மாதங்களில் எதிர்த்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்தார்.  மக்கள்  மத்தியிலும் நல்ல செல்வாக்குடன் வாழ்ந்த என்.டி.ராமராவ்,  தனது இறுதி நாளில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட பிறகு  குடும்ப உறுப்பினர்கள்  அனைவரின் சம்மதத்துடன் என்னை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சந்திரபாபு நாயுடு அவரது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக குடும்பத்தில் உள்ள அவரது பிள்ளைகளை பிரித்து எனக்கு எதிராக செயல்பட  வைத்து அவருக்கு அவப்பெயரை உண்டாக்கி துரோகம் செய்தார். தொடர்ந்து 23 ஆண்டுகளாக என்.டி.ஆரின் பாதையில் போராடி வருகிறேன்.  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததற்கு  காரணம், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை  தொடங்கியது தான். எனவே என்.டி.ஆர். வழியில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்.

பதவிக்காகவோ, பணத்திற்காகவோ நான் ஆசைபட்டதில்லை. ராம் கோபால் வர்மா எடுக்கக்கூடிய லட்சுமிஸ்  என்.டி.ஆர். திரைப்படம் வெளி வந்தால்  மட்டுமே என்.டி.ஆரின் வாழ்க்கை சரித்திரம் முழுவதுமாக வந்ததாக கருதப்படும். இருப்பினும் பாலகிருஷ்ணாவும் எனது மகன் என்பதால்  பாலகிருஷ்ணாவின் படத்திற்கும் ராம்கோபால் படத்திற்கும் எனது ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NTR ,Lakshmi Parvati , NTR History, Lakshmi Parvati
× RELATED ஜெகன்மோகனை கொல்ல முயற்சி உரிய விசாரணை...