×

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : டோனி, தவான் தீவிர பயிற்சி

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்காக அனுபவ வீரர்கள் எம்.எஸ்.டோனி, ஷிகர் தவான் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன. முதல் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்களுக்கு நேற்று வலைப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்கள் சற்று சோர்வடைந்திருப்பார்கள் என்பதால், விருப்பமுள்ளவர்கள் மட்டும் வலைப்பயிற்சி செய்யலாம் என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறாத விக்கெட் கீப்பர் டோனி, தொடக்க வீரர் ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, கேதார் ஜாதவ், யஜ்வேந்திர சாஹல், தினேச்ஜ் கார்த்திக், கலீல் அகமது ஆகியோர் பயிற்சி செய்தனர்.

மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி இந்தியா வந்து மீண்டும் ஆஸி. திரும்பியுள்ள ரவுண்டர் ரோகித் ஷர்மாவும், வலைப்பயிற்சியில் உற்சாகமாக பங்கேற்றார். இன்றைய தினம் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பயிற்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளுக்கான ஆடுகளங்கள் ரன் குவிப்புக்கே அதிக சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியின் பந்துவீச்சு வியூகம் எப்படி இருக்கும் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து ஆஸி. முன்னாள் வீரர் டிர்க் நேன்னஸ் கூறுகையில், ‘டெஸ்ட் போட்டிகளில் பூம்ராவின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப அவர் மிக சுலபமாக தன்னை தயார் செய்துகொண்டார்.

இதற்கு உடல் தகுதியும் முக்கிய காரணம். இங்கு ஒருநாள் போட்டிகளுக்கான ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு அவ்வளவாக ஒத்துழைக்காது என்பதால், இந்திய அணி தனது வியூகத்தில் மாற்றம் செய்யும் என நினைக்கிறேன். மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் ஆச்சரியமில்லை’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia ,Tony ,Dhawan , Australian team, one-day series, Dhawan's intense training
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...