×

திருச்செந்தூர் கோயில் பகுதிகளில் நிரம்பி வழியும் சுகாதார சீர்கேடு: பக்தர்கள் குமுறல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் பகுதிகளில் சுகாதாரகேட்டால் பக்தர்கள் குமுறுகின்றனர். தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோயில்  கடற்கரையில் அமைந்துள்ளதால் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் வரவு மற்றும் பிற வருமானங்கள் என ஆண்டுக்கு ரூ.900 கோடிக்கு மேல் வருகிறது. கோயில் மற்றும் கடற்கரை, சுற்றுபகுதிகளை பராமரிக்க மாதத்தோறும் கோயில் நிர்வாகம் ரூ.33 லட்சம்  ஒதுக்குகிறது. இதை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார்கள். தற்போது கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பள்ளி அரையாண்டு விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இது தவிர தைபூசம் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி கோயிலுக்கு  விரதமிருந்து வரும் பாதயாத்திரை பக்தர்களும் வந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்கள் என அவர்கள் கூட்டமும் அதிக அளவில் உள்ளது. திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவே நிர்வாகம் மாதம் ரூ.33 லட்சம் ஒதுக்கி இருக்கிறது. இதற்காக செக்யூரிட்டி உள்பட 360 பணியாளர்கள் உள்ளனர். இத்தனை இருந்தும் கடற்கரை  பகுதிகளில் மனிதர்கள் மலம் ஜலத்தால் பக்தர்கள் நடமாட முடியவில்லை.  இதில் வேதனை என்னவென்றால் கோயிலை ஒட்டி உள்ள கடற்கரையிலும் பொறுப்பில்லாமல் மலம் கழித்து விடுகிறார்கள். கடற்கரை மணலில் பக்தர்கள் கால் வைக்கமுடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. கோயில்  பகுதியில் ஏராளமான கழிப்பறைகள் உள்ளன. இதுபோதாதென்று தனியார் கழிப்பறைகளும் உள்ளன. இத்தனை வசதிகள் இருந்தும் கடற்கரையில் மக்கள் மலம் கழித்துத்தான் வருகிறார்கள்.  இதை கோயில் நிர்வாகத்தினர் கண்காணித்து தடுக்கவேண்டும். சுகாதார கேடு ஏற்படாமல் பணியாளர்கள் செயல்படவேண்டும் என்று  பக்தர்கள் குமுறுகிறார்கள்.திருச்செந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினத்தில் கடற்கரையை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. கடற்கரை சுத்தமாக இருப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் இங்கு தங்கி பொழுது போக்கி செல்கிறார்கள். அதுமாதிரி திருச்செந்தூர் கடற்கரையையும் தூய்மை படுத்தவேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruchendur ,devotees , Tiruchendur Temple, Kaladar disaster, devotees
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்