×

தமிழகத்தில் நீதித்துறைக்கு நெருக்கடி நிலை என அறிவிக்க நேரிடும்: சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் நீதித்துறைக்கு நெருக்கடி நிலை என அறிவிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கை குறித்து நீதிமன்றம் இந்த அதிருப்தியை தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் வழக்கு விசாரணை நடந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டும் கிண்டியில் தன்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்த முடியாமல் தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டினார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முற்றிலும் மீறுவதாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியதை அடுத்து, மனுவாக அவர் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரைணக்கு வந்தபோது, அரசு தரப்பில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை கிண்டியில் உரிய வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அலுவலகத்தை பூட்டி சாவியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் சிறப்பு அதிகாரி ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஓய்வு பெற்ற பிறகு தம்மை சந்தித்த ஆய்வாளர் சாவியை கேட்டதால், அதை ஒப்படைத்ததாக சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். மேலும், தனக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், தாங்கள் ஒரு கார் ஷெட்-இல் தான் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளை, தங்கள் பிரிவுக்கு திரும்பும்படி சிறப்பு அதிகாரி அறிவுறுத்தி இருப்பதாகவும், அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதையடுத்து, ஓய்வுபெற்ற டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, டிஜிபி தற்போது பணி நீட்டிப்பில் இருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து 50 நாட்களாகியும் இன்னும் ஒரு அலுவலகம் கூட வழங்காததைக் கண்டித்தனர். மேலும், சிலை கடத்தல் தடுப்பு வழக்கை தமிழக அரசு கையாளுவதை பார்க்கும் போது, நீதித்துறை கடும் நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judiciary ,state of emergency ,Tamil Nadu ,The Madras High Court , Tamil Nadu, Judiciary, Crisis, Statue, Ponnu Manikkavale, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை...