×

பெங்களூரு செல்லும் பெருமாள் சிலை திருவண்ணாமலையில் இருந்து செங்கம் சேர்ந்தது

திருவண்ணாமலை:  வந்தவாசியில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும், 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலை, திருவண்ணாமலையில் இருந்து செங்கம் சென்றடைந்தது. தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தைவிட வேகமாக பயணித்தது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு பாறையில் இருந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுமார் 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் பீடத்துடன் இணைத்து 108 உயரத்தில் நிருவ திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்படாத பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. கொரக்கோட்டை கிராமத்தில், கடந்த மாதம் 7ம் தேதி சிலையின் பயணம் தொடங்கியது.

டயர்கள் வெடித்தல், நெருக்கடியான சாலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மரங்கள் அகற்றுதல், நெரிசலான நகர சாலைகளை கடந்து செல்லுதல் என பல்வேறு சவால்களையும் மற்றும் போராட்டங்களையும் கடந்து பெருமாள் சிலை சென்றுகொண்டிருக்கிறது. கொரக்கோட்டை கிராமத்தில் தொடங்கி, திண்டிவனம், செஞ்சி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, மங்களம் வழியாக திருவண்ணாமலை வந்த பெருமாள் சிலை, நேற்று முன்தினம் இரவு கிரிவலப்பாதையில் நிறுத்தப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சிலையை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று காலை 11 மணியளவில் கிரிவலப்பாதையில் இருந்து திண்டிவனம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கம் நோக்கி, பெருமாள் சிலை பயணம் தொடங்கியது. விசாலமான இருவழி சாலையில், பெருமாள் சிலையை சுமந்து சென்ற ராட்சத வாகனம் வழக்கத்தைவிட வேகமாக சென்றது.

காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணியளவில், சுமார் 18 கிமீ தொலைவு பயணித்து செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தை கடந்தது. எந்தவித போக்குவரத்து சிக்கலும், சாலை பாதிப்பும் இல்லாததால் அதே வேகத்தில் பயணித்து, மாலை 6 மணியளவில் செங்கம் அடுத்த எரையூர் கிராமத்தை அடைந்தது.  பெருமாள் சிலை பயணித்த வழிநெடுகிலும், திரண்டிருந்த கிராம மக்கள் வியப்புடன் தரிசனம் செய்தனர். சிலையின் மீது வைத்திருந்த உண்டியலில், தங்களுடைய காணிக்கையை செலுத்தினர். சிலைக்கு பாதுகாப்பாக முன்னும், பின்னும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட பெருமாள் சிலை, ஒரு மாத பயணத்துக்கு பிறகு திருவண்ணாமலை மாவட்ட எல்லையை இன்று கடந்து செல்கிறது. இரண்டு மாநிலங்களின் உறவுக்கும், இணக்கத்துக்கும் இந்த சிலை சாட்சியாக காலம் கடந்து நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perumal ,Bengaluru ,Thiruvannamalai , Bengaluru, Perumal idol, Thiruvannamalai
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்