×

சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கின்றனர் : டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன் : அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பிற நாட்டினர் தட்டிப் பறிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மெக்ஸிகோவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். இதனை தடுக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அகதிகள் நுழைவதை தடுக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மெக்ஸிகோ எல்லையில் நுழைய முயன்ற அகதிகள் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி துரத்தியடிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற அகதிகள் மெக்ஸிகோ எல்லை பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கி வருகின்றனர். இந்நிலையில் மெக்ஸிகோ எல்லையில் சுற்றுச்சுவர் கட்டுவதன் அவசியம் குறித்து மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பையும், ஊதியத்தையும் தட்டிப் பறிக்கின்றனர் என்று கூறியுள்ளார். மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற ஆயிரக்கணக்கானோரை சுங்கத்துறையினரும், எல்லைக் காவல்படையினரும் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றும், அவர்களை முறையாக திருப்பி அனுப்ப வழியும் இல்லை என்றும் கூறியுள்ளார். மெக்சிகோ எல்லை போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதன் வழியாக ஆண்டுக்கு சுமார் ரூ. 35 லட்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார். இதனை தடுப்பதற்காக மெக்சிகோவுடனான எல்லையில் மதில்சுவர் கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் கோடி ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க நாட்டை வளப்படுத்த பங்களிக்கும் சட்டப்படியான குடியேற்றங்களை வரவேற்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : immigrants ,Americans ,Trump , Trump,Mexico border,Americans Employment
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்