×

விழுப்புரம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 5 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விழுப்புரம் அருகே வீரமூர் ஏரியில் கடந்த மாதம் 30ம் தேதி கெடாரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளச் சென்றனர். அப்போது அதிகாலையில் காரில் வந்த கும்பல், அவர்கள் மீது  சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் கிருஷ்ணமூர்த்தியின் மாட்டின் நாக்கு துண்டாகி ரத்தம் கொட்டியது. இதை கண்டித்து திருவண்ணாலை- விழுப்புரம் சாலையில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்த கெடார் போலீசார் விசாரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ரகசிய விசாரணை மற்றும் தடயங்களின் அடிப்படையில் புதுச்சேரி திருக்கனூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு(எ) தங்கராஜ்(38),  மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டைச் சேர்ந்த அருள்பாண்டி(25), கார்த்திக்(27), விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கத்தைச் சேர்ந்த அருள்(35), புதுச்சேரி குருவிநத்தம் பகுதியைச் சேர்ந்த அன்பு(எ) அன்பரசன்(28) ஆகியோர் இந்த  செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்களை தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே பதுங்கியிருந்தபோது சுற்றிவளைத்து கைது செய்தனர்.  இவர்களிடம் நடத்திய விசாரணையில் காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்ற போது, மாட்டின் கண்கள் மிளிர்வதை பார்த்து, காட்டுப் பன்றி என தவறாக எண்ணி 3 முறை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் 94 தோட்டாக்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த  வழக்கில் தலைமறைவாக உள்ள குரு, தேசிங்குராஜா, சரவணன், பரசுராமன், குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gang ,gunmen ,coworker ,Villupuram , incident, Villupuram, , workers, Gunfire arrested
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....