×

சிபிஐ அமைப்பை பாதுகாக்கவே மூத்த அதிகாரிகளுக்கு விடுப்பு; ஜெட்லி விளக்கம்

புதுடெல்லி: சிபிஐ அமைப்பை பாதுகாக்கவே அதன் மூத்த அதிகாரிகள் இருவரை மத்திய அரசு விடுப்பில் அனுப்பியதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.சிபிஐ விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சிபிஐ இயக்குனர் மந்றும் சிறப்பு இயக்குனர் ஆகியோரை கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான், மத்திய அரசு முடிவு எடுத்தது. இது சிபிஐ அமைப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. இது எந்த தனிநபருக்கும் எதிரான முடிவு அல்ல.

இதேபோல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் மரியாதை அளித்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு ஒரு வாரத்தில் முடிவு எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த நிலையில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீன் சுர்ஜிவாலா டிவிட்டரில்,‘‘சிபிஐயின் செயல்பாட்டை சீரழித்தவர் என்ற பெருமையை பெற்ற பிரதமர் மோடி, தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை மேற்கொண்ட முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த தீர்ப்பு ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் வலிமை குறித்து அவருக்கு பாடம் புகட்டியுள்ளது. ரபேல் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவார் என்ற பயத்தில் தானே வர்மாவை விடுப்பில் அனுப்பினீர்கள் மோடிஜி?’’ என பதிவிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘‘சிபிஐ இயக்குனரை திரும்ப பணியில் அமர்த்த உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளதால் பிரதமர் மோடி இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்’’ என்றார். சிபிஐ.யைப்போல் பல்வேறு மத்திய அமைப்புகளை மோடி அரசு வீழ்ச்சியடைய செய்துள்ளதுடன் ஜனநாயகத்தையும் மோடி வீழ்ச்சியடைய செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, `சிபிஐ போன்ற தனி அதிகாரம் கொண்ட அமைப்புகள் ஜனநாயகத்தின் தூண்கள்’ என தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,Jetley , CBI, Senior Officials, Leave, Explanation of Jetley
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...