×

இலங்கை வடமாகாண கவர்னராக இந்திய வம்சாவளி தமிழர் இன்று பொறுப்பேற்பு

ராமேஸ்வரம்: இலங்கை வடமாகாண கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழரான சுரேன் ராகவன் யாழ்ப்பாணத்தில் இன்று பொறுப்பேற்க உள்ளார். இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, தலைமன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி வடமாகாணம் என்றழைக்கப்படுகிறது. இதன் தலைநகராக யாழ்ப்பாணம் விளங்கி வருகிறது. வடமாகாணத்தின் முதல் கவர்னராக 1.1.2007ல் மோகன் விஜேவிக்ரம பொறுப்பேற்றார். தொடர்ந்து விக்டர் பெரேரா, டிக்சன் சரத் சந்திரடேலா, ஜி.ஏ.சந்திர, எச்.எம்.ஜி.எஸ்.பலிஹாக்கரா, ரெஜினால்ட் குரேவின் ஆகியோர் கவர்னர்களாக பதவி வகித்தனர்.

2016 பிப்ரவரி முதல் கவர்னராக இருந்த ரெஜினால்ட் குரேவின் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலையில் வடமாகாணத்தின் 7வது கவர்னராக சுரேன் ராகவன் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இந்திய வம்சாவளி தமிழரான இவர், இலங்கை கம்பஹா மாவட்டத்தில் பிறந்தவர். இங்கிலாந்து மற்றும் கனடாவில் மேற்படிப்புகளை முடித்த இவர், இலங்கை ஜனாதிபதி ஊடகப்பிரிவில் முன்னாள் அதிகாரியாக பணியாற்றியவர். இலங்கையின் நேரடி அரசியல் விவகாரங்களில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையேயான சமாதான உடன்படிக்கை நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வடமாகாணத்தின் முதல்வராக விக்னேஸ்வரன் பொறுப்பு வகித்து வரும் நிலையில், அம்மாகாணத்தின் கவர்னராக பதவியேற்றுள்ள சுரேன் ராகவன் இன்று முறையாகப் பொறுப்பேற்று கொள்கிறார். வடமாகாண கவர்னராக முதன்முறையாக தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளது இலங்கை தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,governor ,province ,Sri Lanka , Sri Lanka, Governor, Indian origin, Tamil
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...