×

ஆதனூர்- குமாரமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை மூலம் 6 டிஎம்சி நீர் சேமிப்பு, 1 லட்சம் ஏக்கர் பாசன வசதி

திருவிடைமருதூர் : தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த  திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே  ரூ.400 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும் என்று 2014ம் ஆண்டு  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதையடுத்து  தமிழக முதல்வர் பழனிச்சாமி கடந்தாண்டு சட்டப்பேரவை கூட்டத்தில்  இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டார். இந்நிலையில்  குமாரமங்கலத்தில் தடுப்பணை  அமையவுள்ள இடத்தை  பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர்  செந்தில்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில்  ரெகுலேட்டர்(தடுப்பணை) அமைக்கப்படவுள்ளது.

இதனால் நாகை, கடலூர்  மாவட்டங்களில் மேலும் ஒரு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். அதே  நேரத்தில் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர  வாய்ப்புள்ளது. மேலும் மழை காலங்களில் இந்த ரெகுலேட்டர் மூலம் 6  டிஎம்சி தண்ணீரை கடலில் கலக்காமல் தடுத்து இருபுறமும் பிரித்து  அனுப்ப முடியும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1,600 மீட்டர்  நீளத்தில் 15 அடி அகலத்தில் அந்த ரெகுலேட்டர் அமைக்கப்படும். இதில்  மக்கள் பயன்பாட்டுக்கு இருவழிப்பாதை அமைக்கப்படுகிறது.  இப்பணிக்கான நிதியை அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் மே  மாதத்தில் பணிகள் துவங்கும். 2 ஆண்டுகளில் பணிகள் முடிந்து  பயன்பாட்டுக்கு  வரும் என்றார்.  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, உதவி பொறியாளர் யோகேஸ்வரன் முத்துமணி உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : irrigation facility ,river ,Adnur-Kumaramangalam Kollidam , 6 TMC Water Storage, 1 lakh acre, irrigation ,new blockade, Adnur-Kumaramangalam, Kollidam river
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி