×

ஆழியார் அணையில் காட்டு யானைகள் : சுற்றுலா பயணிகள் ரசிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த அடர்ந்த வனப்பகுதியிலிருந்து, ஆழியார் அணை நோக்கி கூட்டமாக வரும் யானைகளை, சுற்றுலா பயணிகளை ரசித்து வருகிறார்கள். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார், நவமலை, சர்க்கார்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் யானை, வரையாடு, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால், வனத்தில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் விலங்குகள் நீர் நிலைகளை தேடி இடம்பெயர்வது குறைவானது. ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாத்திற்கு மேலாக மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், வனத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைய துவங்கியுள்ளது.

கடும் பனிப்பொழிவால் தாவரங்கள் வாடிவதங்கிய நிலையில் உள்ளது. இதனால், கடந்த சில வாரமாக அடர்ந்த வனத்திலிருந்து யானை மற்றும் வரையாடு உள்ளிட்ட விலங்குகள், ஆழியார் அணையின் பின்பகுதியில் உள்ள நீர்நிலைகளை தேடி வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக நவமலை வனத்திலிருந்து யானைகள் கூட்டம், கூட்டமாக இடம் பெயர்ந்து நீர்நிலைகளை தேடி வரத்துவங்கியுள்ளது. நேற்று பகல் நேரத்திலேயே, 2 குட்டியானை உள்பட 5க்கும் மேற்பட்ட யானைகள்,  உணவுதேடி நவமலை ரோட்டிற்கு வந்து, ரோட்டோரம் உள்ள மரக்கிளைகளை உடைத்து தின்றது. பின்னர் அந்த யானைகள், அருகே உள்ள ஆழியார் அணை நீர்நிலைக்கு சென்று சாவகாசமாக நீண்டநேரம் நின்று தண்ணீர் அருந்திவிட்டு மாலையில் வனத்திற்குள் சென்றது. இந்நிலையில், வால்பாறை மற்றும் குரங்கு அருவிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் பலரும், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை பார்த்து ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இருப்பினும், சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை தொந்தரவு செய்துவிட கூடாது என்பதற்காக, அவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Aliyar , Wild elephants, Aliyar dam,Tourists are welcome
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...