சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி: கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா பதிலால் சர்ச்சை

மும்பை: சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு இந்திய வீரர்கள் கே. எல். ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என கூறியதால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளனர். ’காபி வித் கரண்’ (Coffee with Karan) எனும் நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள், கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியாவும், கே.எல். ராகுலும் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. காபி வித் கரண்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராபிட் ஃபயர் (Rapid Fire) சுற்றில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இவர்களில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கரண் ஜோகர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சற்றும் யோசிக்காமல் கே. எல். ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் சச்சினை விட விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என பதில் கூறினர். இதைதொடர்ந்து அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினர். சச்சினை விட கோலி சிறந்த பேட்ஸ்மேனா? என இருவரையும் கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர். அணியில் இடம்பிடிப்பதற்காக தான் சச்சினை விட கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று இருவரும் கூறியுள்ளார்கள் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பிடும் படியாக இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, சச்சினை விட விராட்கோலி சிறந்த பேட்ஸ்மேன் என கூறிய கே. எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும், மேலும் கபில் தேவ்-ஐ விட ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் என்றும் விரேந்தர் சேவாக்-ஐ விட கே. எல்.ராகுல் சிறந்த தொடக்க வீரர் என்றும் கிண்டலடிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Virat Kohli ,Sachin ,Harpic Pandya ,K.L.Rahul , Virat Kohli,batsmen,Sachin,K.L.Rahul,Hardik Pandya
× RELATED இன்ஸ்டராகிராமில் 5 கோடி ஃபாலோயர்ஸ்...