×

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லை : ஆழியார் அணை நீர்மட்டம் 96 அடியாக சரிந்தது

பொள்ளாச்சி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின்மையால், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து, இதனால் அணையின் நீர்மட்டம் 96அடியாக சரிந்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2017ம் ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, மழையின்றி வறட்சி ஏற்பட்டதால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து நீர்மட்டம் மிகவும் சரிந்தது. இதனால் கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அணையின் நீர்மட்டம் 65அடியானது.  பின், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை என தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் பெய்த தென்மேற்கு பருவமழையால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக, ஜூலை மாதம் இறுதியில் அணையின் முழு அடியையும் தண்ணீர் எட்டியது. இதனால் தொடர்ந்து ஒரு மாதமாக அணையின் மெயின் மதகில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும், அவ்வப்போது காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதால், கடந்த அக்டோபர் மாதம் வரை நீர்மட்டம், 118 அடியாக இருந்தது. பின், கடந்த நவம்பர் மாதம் துவக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்திருந்தாலும், தண்ணீர் வரத்து எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போனது. இதனால், அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல சரியத் துவங்கியது.

இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரை, தொடர்ந்து 150 நாட்களுக்கு மேலாக 105அடிக்கு மேல் தண்ணீர் இருந்துள்ளது. பின், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரமாக மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. மேலும், காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியாரிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து என்பது மிகவும் குறைந்துள்ளது.  இதில் நேற்று காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 92 கன அடியே வரத்து இருந்துள்ளது.

இருப்பினும், தற்போது ஆயக்கட்டு பாசன பகுதி மற்றும் குடிநீர் தேவைக்கு மட்டுன்றி, கேரள மாநில பகுதிக்கு என விநாடிக்கு 788 கன அடி தண்ணீர் திறப்பு உள்ளது. ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து, நீர் திறப்பு தொடர்ந்துள்ளதால் அணையின் நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி 96.50ஆக சரிந்துள்ளது. இதனால், ஜீரோ பாயிண்டிலிருந்து அணையின் நடுவே செல்லும் பழமையான ரோட்டின் பெரும்பகுதி வெளியே தெரிகிறது. மேலும், ஆங்காங்கே பாறைகள் வெளியே தெரிய  துவங்கியுள்ளது, என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Western Ghats ,Aliyar , Western Ghats, rain, Aliyar dam
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...