×

திருவண்ணாமலையில் பிரமாண்ட பெருமாள் சிலை சிக்கலான சாலைகளை கடந்தது

திருவண்ணாமலை: வந்தவாசியில் இருந்து பெங்களூருக்கு கொண்டுசெல்லப்படும், 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலை, திருவண்ணாமலை நகரின் சிக்கலான சாலைகளை வெற்றிகரமாக கடந்து சென்றது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி  உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.இதையொட்டி, 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் ஏற்றி கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, கடந்த மாதம் 7ம் தேதி புறப்பட்டது. டயர்கள் வெடித்தல்,  நெருக்கடியான சாலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மரங்கள் அகற்றுதல் என பல்வேறு சவால்கள் மற்றும் போராட்டங்களை கடந்து பெருமாள் சிலையின் பயணம் தொடர்கிறது.வந்தவாசியில் இருந்து திண்டிவனம், செஞ்சி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, மங்களம் வழியாக திருவண்ணாமலை நகரின் எல்லைக்கு கடந்த 5ம் தேதி மாலை சிலை வந்து சேர்ந்தது. புதிய ரிங்ரோடு அருகே நிறுத்தப்பட்ட  சிலையை, நேற்று முன்தினம் அங்கிருந்து திருவண்ணாமலை நகருக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால், மேடான சாலையை கடக்க முடியாமல் ராட்சத லாரி திணறியது. ஒருநாள் முழுவதும் முயன்றும் பயனில்லை.  அதைத்தொடர்ந்து, சிலையை சுமந்து வரும் லாரியை இழுத்துச்செல்ல கூடுதலாக ஒரு வால்வோ வாகனம் வரவழைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 3 வால்வோ வாகனங்களின் உதவியுடன் நேற்று ரிங்ரோடு பகுதியை ராட்சத லாரி கடந்தது. பின்னர், திண்டிவனம் சாலை வழியாக திருவண்ணாமலை ரயில்வே கேட்டை கடந்து பெரியார் சிலை சந்திப்பு,  மத்தலாங்குளத் தெரு வழியாக திருவண்ணாமலை நகருக்குள் வந்தது.ரயில்வே கேட், பெரியார் சிலை சந்திப்பு, பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா சந்திப்பு ஆகிய குறுகலான பகுதிகளை கடப்பதில் சவால் இருந்தது. ஆனாலும், வால்வோ வாகனங்களை இயக்குவோர், மிக சாதுர்யமாக,  கட்டிடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மெல்ல மெல்ல வாகனத்தை இயக்கினர்.ரவுண்டானா சந்திப்பு அருகே லாரியை திருப்புவதற்காக சென்டர் மீடியன் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு, பஸ் நிலையம் வழியாக கடந்து, அண்ணா நுழைவாயில் பகுதியை பெருமாள் சிலை அடைந்தது.திருவண்ணாமலை நகருக்குள் வந்த பிரமாண்ட பெருமாள் சிலையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து, இன்று காலை செங்கம் நோக்கி பெருமாள்  சிலையின் பயணம் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : idol ,Perumal ,Thiruvannamalai ,roads , Thiruvannamalai,Lord Perumal,complex roads
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்