×

கொடைக்கானல் போலீசாருக்கு புதிய தலைவலி ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் போதை காளான் விற்பனை

கொடைக்கானல்: கொடைக்கானலில் ‘இன்ஸ்டாகிராம்’  மூலம் போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஒரு வகை காளானை காய வைத்து, தேனில் தொட்டு உண்பதால் போதை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை ‘போதை காளான்’ என அழைக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம்,  கொடைக்கானலில் இவ்வகை காளான்கள் அதிகளவில் விளைகிறது. இதனை உண்பதற்காக ஏராளமான வெளிமாநில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். இந்த போதை காளான், போதை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வராததால், இவற்றை விற்பவர்கள், உபயோகிப்பவர்கள் மீது சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இருப்பினும்  திண்டுக்கல் மாவட்ட காவல்துறை போதை காளான் விற்பனையை தடுக்க கண்காணிப்பு, சோதனையில் ஈடுபடுகிறது. இதனால் அடுத்தகட்டமாக நேரடி விற்பனையை தவிர்த்து சமூக வலைத்தளங்களில் இந்த போதை காளான்  விற்பனையை துவக்கி உள்ளனர்.

‘இன்ஸ்டாகிராம்’ எனும் சமூக வலைத்தளத்தில் போதை காளான் விற்பனை மற்றும் பயன்படுத்துவது தொடர்பான வீடியோவை சிலர் பதிவேற்றம் செய்துள்ளனர். இதை நிறைய பேர் லைக், ஷேர் செய்து வருகின்றனர்.  இதனால் போதை காளான் விற்பனை மீண்டும் களைகட்டியிருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. எனவே, இதனை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து கொடைக்கானல் போலீசாரிடம் கேட்டபோது, ‘‘கொடைக்கானலில் போதை காளான் விற்பனை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலமாக விற்பவர்கள் குறித்து விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coca-Cola ,Kodaikanal , Kodaikanal ,headache ,'Instagram', Selling mushroom
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை