×

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திர சாதனை

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடன் சிட்னியில் நடந்த 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 71 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து சரித்திர சாதனை படைத்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, முதலில் நடந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தி முன்னிலை பெற, அடுத்து பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது.

இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்க,  மெல்போர்னில் நடந்த பாரம்பரியம் மிக்க ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்தியா 137 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-1 என முன்னிலை பெற்றதுடன் பார்டர் - கவாஸ்கர் டிராபியையும் தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. டாசில் வென்று பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மயாங்க் 77, புஜாரா 193, ஜடேஜா 81, ரிஷப் பன்ட் 159* ரன் விளாசினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 300 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 322 ரன் பின்தங்கிய ஆஸ்திரேலியா பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.

அந்த அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த நிலையில், மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கவாஜா 4, ஹாரிஸ் 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 316 ரன் தேவை என்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி நேற்று கடைசி நாள் சவாலை எதிர்கொள்வதாக இருந்தது. எனினும், கனமழை காரணமாக ஆட்டம் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, போட்டி டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

கடந்த 1947ம் ஆண்டு தொடங்கி ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற சோக வரலாற்றை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மாற்றி எழுதி சரித்திர சாதனை படைத்ததுடன், ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் வசமாக்கியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை செதேஷ்வர் புஜாரா தட்டிச் சென்றார்.

‘தொடர்’ வரலாறு...
* 1947-48ல் இருந்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா நடப்பு தொடருக்கு முன்பாக 11 டெஸ்ட் தொடர்களில் விளையாடி இருந்தது. அவற்றில் 1980-81, 1985-86 மற்றும் 2003-04ல் மட்டும் டிரா செய்த இந்தியா, 8 தொடர்களில் தோற்றிருந்தது. தற்போது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 2-1 என முதல் முறையாக தொடரை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
* வெளிநாட்டு மைதானங்களில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன்கள் வரிசையில் சவுரவ் கங்குலியுடன் சமநிலையில் இருந்த கோஹ்லி (தலா 11 வெற்றி), சிட்னியில் தனது 12வது வெற்றியை பதிவு செய்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
* நடப்பு தொடரில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட சதம் அடிக்கவில்லை. இந்திய தரப்பில் புஜாரா 3 சதங்கள் உட்பட 521 ரன் குவித்தார் (அதிகம் 193, சராசரி 74.42, சதம் 3, அரை சதம் 1). கேப்டன் கோஹ்லி, விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தலா 1 சதம் விளாசினர்.
* பந்துவீச்சாளர்களில் இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா, ஆஸி. சுழல் நாதன் லயன் இருவரும் தலா 21 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்தனர். முகமது ஷமி (16 விக்கெட்), பேட் கம்மின்ஸ் (14), ஹேசல்வுட் மற்றும் ஸ்டார்க் தலா 13 விக்கெட் வீழ்த்தி அடுத்த இடங்களைப் பிடித்தனர்.

வாழ்த்து மழை...
இந்திய அணியின் சாதனை வெற்றிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள கோஹ்லி மற்றும் அணியினருக்கு எனது வாழ்த்துக்கள். உங்களின் உறுதியான பேட்டிங், அற்புதமான பந்துவீச்சு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியால் பெருமை கொள்கிறோம். இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்வோம்’ என்று ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார். பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், ‘ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் வெற்றி கிடைத்துள்ளது. அணியின் கடின போராட்டத்துக்கும், தகுதி வாய்ந்த தொடர் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.

இந்த தொடரில் மறக்க முடியாத சிறந்த செயல்பாடுகளையும், உறுதியான கூட்டு முயற்சியையும் பார்க்க முடிந்தது. அடுத்து வரும் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னாள் நட்சத்திர வீரர்கள், விளையாட்டு மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Australian ,series ,Test , Australian team, Test, India
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...