×

நிர்மலா சீதாராமன் கூறுவது சுத்தப்பொய் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார்: ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘எச்.ஏ.எல் நிறுவன ஆர்டர் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சுத்தப் பொய். அவர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார்’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் மீண்டும்  குற்றம் சாட்டியுள்ளார். ரபேல் போர்  விமான ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் கடந்த  வெள்ளிக்கிழமை விவாதம் நடந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘‘எச்ஏஎல் திறனை மேம்படுத்த காங்கிரஸ் அரசு  எதுவும்  செய்யவில்லை. பாஜ தலைமையிலான மத்திய அரசு, அந்த நிறுவனத்துக்கு ₹1 லட்சம்  கோடி மதிப்பிலான ஆர்டர்களை கொடுத்துள்ளது’’ என கூறினார்.எச்ஏஎல்  நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் இதை மறுத்தார். இதை ராகுல் தனது டிவிட்டரில் விமர்சித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் நேற்று பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ₹26,570 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஏற்கனவே  கையெழுத்திடப்பட்டுள்ளது என்பதற்கான உறுதியை எச்.ஏ.எல் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளேன். ₹73 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை முடிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் கூறியது சரியான  தகவல் என இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார். அவர் கூறுவது சுத்தப் பொய். எச்.ஏ.எல் நிறுவனம்  எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் ₹26,570 கோடி. மீதம் ₹73 ஆயிரம் கோடி ஆர்டர் தொடர்பான விஷயங்கள் தொழில்நுட்ப குழுவின் மதிப்பீட்டில் உள்ளது. இது ஆர்டர் அல்ல. எச்.ஏ.எல் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய  ₹15,700 கோடியை அரசு தரவில்லை. ஆனால் இன்னும் ஒரு ரபேல் விமானத்தை கூட டெலவரி செய்யாத டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கு மத்திய அரசு ₹20 ஆயிரம் கோடி கொடுத்துள்ளது. இதெல்லாம் எச்.ஏ.எல் நிறுவனத்ததை பலவீனப்படுத்தும் செயல். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட எச்.ஏ.எல் நிறுவனத்திடம் போதிய பணம் இல்லை. கடன் வாங்கி சம்பளம் வழங்குகிறது. ரபேல் விமானம் தயாரிக்க  தொழில் அதிபர் அனில் அம்பானியிடம் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் உள்ளது. அவரது நிறுவனம் தனது ஒப்பந்தத்தை முடிக்க எச்.ஏ.எல் நிறுவனத்தில் பணியாற்றும் திறமையான நபர்கள் தேவை. எச்.ஏ.எல் நிறுவனத்தின்  நிதியை முடக்குவதால், அங்குள்ள இன்ஜினியர்களும், விஞ்ஞானிகளும் அனில் அம்பானி நிறுவனத்தில் சேரும் கட்டாயத்துக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Sitaraman ,parliament ,Rahul , Nirmala Sitharamaan, Parliament, Rahul
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...