சென்னை: அரசு இ-சேவை மையங்களில் வில்லங்கச்சான்று கேட்டு பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதிக்கான மென்பொருள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வசதி விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் தெரிவித்தார்.
சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் வில்லங்கச்சான்று உடனடியாக தராமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, வில்லங்க சான்று பெறும் திட்டத்தை கடந்த டிசம்பர் 10ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வழி விண்ணப்பித்து, கட்டணத்தை செலுத்தினால் விரைவு குறியீடு மற்றும் சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் கையொப்பமிட்ட வில்லங்க சான்று மற்றும் ஆவண நகல் விண்ணப்பதாரரின் பயனர் உள்நுழைவிற்கு அனுப்பப்படுகிறது. தற்போது, 1.1.1975 முதல் ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெற்று கொள்ள முடியும். கடந்த ஜனவரி 2ம் தேதி இத்திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி தற்போது ஆன்லைனில் வில்லங்கச்சான்று கேட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. ஜனவரி 2ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இணையம் வழியாக 17,062 விண்ணப்பங்களுக்கு பெறப்பட்டு, அதில்,11,989 விண்ணப்பங்கள் உரிய சான்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2.1.2019 முதல் 5.1.2019 வரை இணையதளம் மூலம் சான்றிட்ட நகல் கோரி 5,452 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 4,229 விண்ணப்பங்களுக்கு உரிய சான்று தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வசதியால் வில்லங்கச்சான்று பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை அறவே தவிர்க்கப்பட்டுள்ளது.இது குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் கூறியதாவது:இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட வில்லங்க சான்று மற்றும் சான்றிட்ட நகல்களை தயாரித்து 3 நாட்களுக்குள் விண்ணப்பதாரரின் உள்நுழைவிற்கு அனுப்ப வேண்டும் என அனைத்து பதிவு அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வரை எந்த விண்ணப்பமும் 3 நாட்களுக்கு மேல் தயார் செய்ய நிலுவையில் இல்லை. விண்ணப்பங்கள் உரிய காலத்தில் பரிசீலிக்கப்பட்டு, சான்றுகள் தயாரித்து அனுப்பப்படுவது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்களின் ஐடி முகவரியில் அனுப்பப்படுவதால், எத்தனை முறை வேண்டுமானாலும் அச்சுபிரதி எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். அரசு இ-சேவை மையங்களில் வில்லங்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் விண்ணப்பிக்கும் வசதிக்கான மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு இ-சேவை மையங்களிலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வண்ணம் இவ்வசதி விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
