×

அம்பத்தூர் கருக்கு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாத சாலையோர குளம்: விபத்து அபாயம்

அம்பத்தூர்: அம்பத்தூர் கருக்கு பகுதியில் சாலையோரம் உள்ள குளத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.அம்பத்தூர் அடுத்த கருக்கு பெரியார் சாலையோரம், சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் ஆறாக்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி குடியிருப்புகள், ரயில் நிலையம், அம்மா உணவகம், பஸ் நிறுத்தம், பள்ளிக்கூடம் உள்ளிட்டவை  அமைந்துள்ளன.இந்த குளத்தை ஒட்டிய சாலை வழியாக அம்பத்தூர், கருக்கு, கள்ளிக்குப்பம், மேனாம்பேடு புதூர், கொரட்டூர், பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தினசரி நூற்றுக்கணக்கான  வாகனங்கள் இவ்வழியே செல்வதால் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. மேலும், அம்பத்தூரில் இருந்து சென்னை மாநகருக்கு சி.டி.எச் சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசலுடன், காலதாமதமும் ஏற்படுவதால், பல வாகன ஓட்டிகள் கருக்கு, பெரியார் சாலை வழியாகத்தான் செல்கின்றனர்.

இந்நிலையில், சாலையோரம் உள்ள இந்த குளத்திற்கு தடுப்புச் சுவர் இல்லாததால், இவ்வழியே செல்லும் வாகனங்கள் திடீரென்று குளத்துக்குள் பாய்கின்றன. சமீபத்தில் ஒரு ஆட்டோ, இரண்டு பைக்குகள் குளத்திற்குள் விழுந்து  விபத்தில் சிக்கியுள்ளன. அவ்வழியாக சைக்கிளில் வரும் பள்ளி மாணவர்களும் சில நேரங்களில் குளத்தில் தவறி விழுகின்றனர். எனவே, இந்த குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் பல ஆண்டாக வலியுறுத்தியும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், பெரிய அளவில்  அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஆறாக்குளத்தில் விடப்படுவதால் கழிவுநீர் குட்டை போல் மாறி வருகிறது. இதிலிருந்து கொசுக்கள் அதிகளவில்  உற்பத்தியாவதால்  சுற்றுப் பகுதி மக்களுக்கு டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட பல்வேறு மர்ம  காய்ச்சல் பரவி வருகிறது. மேலும், இந்த குளம் சமீப காலமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் குளத்தின் பரப்பளவு சுருங்கி கொண்டே  வருகிறது.  எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும். குளத்திற்கு கரைகள் அமைத்து, சாலைேயார தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : roads ,Ambatur Karku ,area , Roads, Ambattur Kerku,area,roadblocks,accident risk
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...