×

பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரேஷன் அட்டைக்கு 1000 வழங்கும் திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: அனைத்து குடும்ப அட்டைக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர்  நேற்று தொடங்கி வைத்தார். நாளை முதல் தமிழகத்தில் உள்ள  அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய்  மற்றும் இரண்டு அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு, பொங்கல் பண்டிகைக்கு முன்பே நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22ம் தேதி அறிவித்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிட தமிழ்நாடு அரசு 258  கோடி நிதி ஒதுக்கீடு அரசாணையும் வெளியிட்டது. இந்த நிலையில், கடந்த 2ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட 1000 ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
 
அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகிய  2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீள கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினையும், திருவாரூர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள 1 கோடியே 97 லட்சத்து 98 ஆயிரத்து 102 குடும்பங்களுக்கு தலா 1000ம் வழங்குவதற்கு அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் தலைமை செயலகத்தில் வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,  உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா,  உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் மதுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் நேற்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நாளை முதல் (7ம் தேதி) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் 1000 வழங்கப்படுகிறது. அதேநேரம், 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palaniasamy , Pongal special package , 1000 ration card ,launched ,Chief Minister Palaniasamy
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர்...